சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்துள்ளது. இந்த நிலையில், “தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாக பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது பெரிய ஆச்சரியமில்லை” என தவெக தலைவர் விஜய் பாஜக- அதிமுக கூட்டணி குறித்து விமரிசித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மக்கள் விரோத மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும், மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி.
திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது பெரிய ஆச்சரியமில்லை.

அதிமுக - பாஜக நிராகரிக்கப்பட்ட கூட்டணி:
பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே மூன்று முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டணியே இப்போது ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 'நாங்கள் தான் திமுகவிற்கு எதிரான ஒரே அணி' என்று பாஜகவும், 'தாங்கள் தான் பாஜகவிற்கு எதிரான அணி' என்று திமுகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர்.
பாஜகவும், திமுகவும் மறைமுக உறவுக்காரர்கள்:
மத்தியில் ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் திமுகவும் வெளியில் தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன?
மற்ற மாநிலங்களில் முதலமைச்சரே ஊழல் செய்தாலும், அவருக்கு தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும். ஆனால், இங்கு ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது, அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால் அவரது நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாட்டு மக்கள் அறிவர்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுக! 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என அமித் ஷா அறிவிப்பு! |
தவெக - திமுக இடையே தான் போட்டி:
திமுகவும், பாஜகவும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது. தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார்? தங்களுடன் உண்மையான உணர்வுடன் நிற்பவர்கள் யார்? தங்கள் வீட்டுப் பிள்ளைகள் யார்? தங்களுக்கான உண்மையான மக்களாட்சியைத் தர வல்லவர்கள் யார்? என்பதை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். முன்னதாக கூறியது போன்று 2026 சட்டப்பேரவை தேர்தலில், தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி.
கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு:
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் என நம்முடைய கொள்கைத் தலைவர்கள் மற்றும் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் ஆளுமைகளின் ஆசியுடனும், மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை உறுதியுடனும், தவெகவுக்கு ஆதரவாக, கோடிக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் மாபெரும் மக்கள் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள்.
எனவே, பிளவுவாத பாஜக மற்றும் மக்கள் விரோத திமுகவின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும், மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி. நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவதும் உறுதி” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்