சொல்லாத வார்த்தைக்குதான் அதிக வலிமை உண்டு என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. அதனை சமீபத்தில் மெய்ப்பித்து காட்டியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆம், ஒரு வார்த்தை கூட பேசாமல், தன்னை சுற்றியும், தனது கொள்கைகளை சுற்றியும் பரப்பப்படும் யூகங்களுக்கு அவர் கொடுத்த சம்மட்டி அடிதான் இன்றைய அரசியல் களத்தை கலகலக்க செய்திருக்கிறது.
அப்படி விஜய் செய்த 'சம்பவம்' தான் என்ன? இலங்கையில் கடந்த 2009-இல் நடந்த போரில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களின் நினைவேந்தல் ஆண்டுதோறும் மே 18ல் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 18) தவெக சார்பில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தவெகவினரும், விஜய் ரசிகர்களும் கலந்துகொண்டனர். இதுதவிர, விஜய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்கள், பொது இடங்களில் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

விஜய்யும், கருணாநிதி புகைப்படமும் !
விஷயம் இதுவல்ல.. அன்றைய நினைவேந்தல் தினத்தின் போது, தவெக ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தது. அதுதான் உச்சக்கட்ட ஹைலைட். அந்தப் பதிவில், உயிர்நீத்த இலங்கை தமிழர்களுக்கு விஜய் அஞ்சலி செலுத்தும் புகைப்படமும், அதன் பின்னணியில் இலங்கை போரை நிறுத்த வலியுறுத்தி, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த புகைப்படமும் இடம்பெற்றிருந்தன. மேலும், உண்ணாவிரதம் இருக்கும் கருணாநிதிக்கு அருகே திமுக நிர்வாகிகள் சிரித்துக் கொண்டிருப்பதை போன்ற படமும் அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
காலை தொடங்கி மாலையில் முடிவடைந்த கருணாநிதியின் அந்த உண்ணாவிரதம், ஒருகட்டத்தில் திமுகவுக்கே எதிராக திரும்பியதுதான் வரலாறு. கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தததால்தான், இலங்கை போர் முடிவுக்கு வந்ததாக திமுகவினர் செய்த பரப்புரைகள் அந்த சமயத்தில் மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின. அதே வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இது பெரிதாக பிரதிபலிக்கவில்லை என்றாலும், 2011 சட்டமன்றத் தேர்தலில் இதன் மோசமான தாக்கத்தை திமுகவினர் உணர்ந்தனர் .

இலங்கையில் ஒரு லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட பிறகு, கருணாநிதி வெறும் 3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்ததும், ஏர்கூலருக்கு அருகே அவர் படுத்திருந்த புகைப்படமும் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முக்கிய பிரச்சார ஆயுதங்களாக மாறின. அன்றைக்கு அரியணையை விட்டு வெளியேறிய திமுக, மீண்டும் அதில் அமர 10 வருடங்கள் பிடித்தது என்பது தனிக்கதை.
பரபரப்பை ஏற்படுத்திய உண்ணாவிரத ஃப்ளாஷ்பேக்:
இப்படிப்பட்ட சூழலில்தான், விஜய் மீண்டும் அந்த ஃப்ளாஷ்பேக்கை மக்களுக்கு இப்போது நினைவூட்டி இருக்கிறார். இதற்கு பின்னால் பல அரசியல் காரணங்களும் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒன்று, தான் அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்திய திமுக மீது தான் கொண்டுள்ள நிலைப்பாடு எப்போதுமே மாறாது என்பதே விஜய் வெளிப்படையாக சொல்லும் முதல் செய்தி.

இரண்டாவது, தனது கொள்கை எதிரியான பாஜகவுக்கு விஜய் மறைமுகமாக உணர்த்திய செய்தி. ஆம். விஜய் அரசியலுக்கு வந்த போது, அவரை விமர்சிப்பதில் திமுகவினரையே 'ஓவர்டேக்' செய்துகொண்டு வரிந்துகட்டி வந்த ஒரே கட்சி பாஜகதான். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க, விஜய் மீதான தனது டோனை அக்கட்சி சற்று சாஃப்ட்டாக மாற்றிக் கொண்டு வருகிறது. அதிமுகவை வளைத்ததை போல, மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் விஜய்யை எப்படியாவது தன் பக்கம் இழுக்க பல திசைகளில் இருந்தும் முயற்சி செய்கிறது அக்கட்சி.

'தம்பி' விஜய்யாக மாறிய ஜோசப் விஜய்!
அதன் வெளிப்பாடாகவே, தமிழிசை செளந்தரராஜனின் சமீபத்திய பேச்சை பார்க்க முடிகிறது. "பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெகவில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வான அறிவிப்பு வரவில்லை. தவெக தலைவர் 'தம்பி' விஜய்யும் அப்படி ஏதும் கூறியதாக தெரியவில்லை. தவெகவில் மற்ற நிர்வாகிகள் கூறுவதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என தமிழிசை செளந்தரராஜன் கூறியிருந்தார். பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக துணைப் பொதுச்செயலாளர் அழுத்தம் திருத்தமாக கூறியதற்கு தமிழிசை செளந்தரராஜன் அளித்த பதில்தான் இது.
இதனால் ஒருவேளை பாஜக கூட்டணியில் விஜய் சேர்ந்து விடுவாரோ என்ற எண்ணமும் பலருக்கு உருவானது. அதற்குள், பாஜக கூட்டணியில் தவெகவுக்கு 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கப் போவதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாகவும் ஒருபக்கம் பேச்சுகள் அனல் பறக்க தொடங்கின.

பாஜக பக்கம் செல்வாரா?
இப்படிப்பட்ட பின்னணியில்தான், இலங்கைத் தமிழர்களின் நினைவேந்தல் நாளில் தவெக பதிவிட்ட புகைப்படத்தை நாம் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஏனெனில், இலங்கை தமிழர் விவகாரத்திலும், தனித்தமிழ் ஈழ விவகாரத்திலும் பாஜகவின் நிலைப்பாடு முற்றிலும் வேறானது. போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீர்மானத்தை இந்தியா தொடர்ந்து புறக்கணித்ததையே இதற்கு சிறந்த உதாரணமாக நாம் கூற முடியும்.
அதுமட்டுமல்ல. மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டமும் இதனை உறுதிப்படுத்தியது. அச்சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்களை இந்தியா ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்டை நாடான இலங்கையில், கொடும்போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை, (அவர்கள் இந்துவாக இருந்தபோதும்) அச்சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே திமுக உள்ளிட்ட கட்சிகள் முன்வைக்கும் விமர்சனம்.
இவ்வாறு தனது ஒவ்வொரு நகர்விலும் இலங்கை தமிழர்களுக்கு முரணான நிலைப்பாட்டை பாஜக எடுத்து வந்திருக்கிறது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, தனது ஆரம்பக்கால அரசியல் பயணம் முதலாக இலங்கை தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை தனது தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார் விஜய்.

விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்:
இப்போது நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சி மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு நவம்பர் 27ல் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியிலும் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களின் புகைப்படம் முன்பு வீரவணக்கம் வைத்து தனது மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் தீவிரமடைய தொடங்கிய 2008ம் ஆண்டிலேயே, தனது ரசிகர்களுடன் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதம் இருந்து பல அரசியல் கட்சிகளுக்கே முன்னுதாரணமாக இருந்தவர் விஜய்.
இவ்வாறு, இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் தாம், ஒருபோதும் பாஜகவில் இணைய மாட்டேன் என்பதுதான் தவெக நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஜய் சொல்லாமல் சொல்லிய செய்தி. அதேபோல, கருணாநிதியின் உண்ணாவிரத புகைப்படத்தை பதிவிட்டதன் மூலமாக, இலங்கை தமிழர்களுக்கு தக்க சமயத்தில் உதவாத திமுக, எப்போதுமே தனது அரசியல் எதிரிதான் என்பதை மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தி இருக்கிறார் விஜய்.
