சென்னை: தென்னை மரத்தில் சிக்கிக் கொண்ட பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அவரது மனைவி எமிலியம்மாள், இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
பத்து வயது சிறுவனான கார்த்திக், ஆவடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், தாய் எல்லியம்மாளுடன் கார்த்திக், தமது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் நடந்த பிராத்தனை கூடத்துக்கு சென்றார். எமிலியம்மாள் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, அங்கு வந்த சிறுவர்களுடன் சேர்ந்து கார்த்திக் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு சிறுவன் விட்ட பட்டம் ஒன்று தென்னை மரத்தின் கிளைகளில் சிக்கி இருந்தது. இதையடுத்து அருகில் இருந்த கட்டடத்தின் மொட்டை மாடிக்குச் சென்று தென்னை மரத்தில் கால் வைத்து ஏறி பட்டத்தை எடுக்க முயன்றபோது எதிர்பாரதவிதமாக கார்த்திக் தவறி கீழே விழுந்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை! வீட்டில் சோதனை!
இதைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த கார்த்திக்கின் தாய் எமிலியம்மாள் பிராத்தனைக் கூடத்தில் இருந்து ஓடோடி வந்தார். கீழே விழுந்ததால் தலையில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் இருந்த கார்த்திக்கை, வாகனம் ஒன்றில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எல்லியம்மாள் அழைத்துச் சென்றார்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கார்த்திக்குக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் தாய் எமிலியம்மாள், அவரது கணவர் மற்றும் சகோதரிகள் கதறி அழுதனர். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் சிறுவன் தவறி விழுந்தது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆவடி போலீசார் கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.