சென்னை: சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் ஷாம். தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர், தனது வீடு அருகே நிறுத்த இடம் இல்லாததால் குமரன் நகர் 7-வது தெருவில் கார் நிறுத்துவது வழக்கம். இதே போல் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு வந்த அவர் தனது 13 வயது மகனிடம் சாவியைக் கொடுத்து, நிறுத்தி வைத்துள்ள கார் மீது கவர் போட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால், கார் நிற்கும் இடத்திற்கு நண்பருடன் சென்ற சிறுவன், காரை குமரன் நகர் மெயின் ரோடு வழியாக ஓட்டியுள்ளார்.
அப்போது வடபழனி குமரன் நகர் 5வது குறுக்கு தெரு அருகே வரும் போது, முதியவர் ஒருவர் குறுக்கே வர, பிரேக்கிற்கு பதில் ஆக்ஸ்லேட்டரை மிதித்ததாகத் தெரிகிறது. இதில் வேகம் எடுத்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மற்றும் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடந்து சென்ற முதியவர் மற்றும் ஆட்டோவில் இருந்த இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், 13 வயது சிறுவன் ஓட்டிய கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் காரில் இருந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
மேலும், 13 வயது சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை ஷாம் மீது மோட்டார் வாகன சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மைனர் என்பதால் எச்சரிக்கை மட்டும் விடுத்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
சிறுவர்கள் வாகனங்களை ஓட்ட பெற்றோர்கள் அனுமதி கொடுக்கக் கூடாது எனவும், மீறி சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.