கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி அருகே அமைந்து உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். வரும் மே 13 ஆம் தேதி சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி, 14 ஆம் தேதி தேரோட்டம் மற்றும் பந்தலடியில் அழுகளம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த அழுகளம் நிகழ்ச்சி மற்றும் தேரோட்டத்தை காண வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் என பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே பந்தலடியில் வளையல், பொம்மைகள், தின்பண்டங்கள், ராட்டினம் போன்ற கடைகளை வைக்க தொடங்கிவிட்டனர். இந்த கடைகளை வைத்திருப்போர் ஆங்காங்கே பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி பொருட்களை வாங்கி வைத்துள்ளனர்.
இவர்கள் யாரும் பெரிய செல்வந்தர்களோ, மிட்டா மிராசோ இல்லை. அன்றாட பிழைப்பு நடத்துபவர்கள். திருவிழா நேரத்தில் பொருட்கள் அனைத்தும் விற்பனை ஆகுமா? விற்காமல் நஷ்டம் வருமா? என்பதை நினைப்பில் வருகிற 16 ஆம் தேதி வரை பந்தலடியில் கடை வைத்திருப்பார்கள். இதனை ஆண்டுதோறும் அவர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரிகள், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக கூறி பந்தலடியில் அழுகளம் முடிந்தவுடன் கடைகளை மூடச்சொல்லி வியாபாரிகளை நிர்ப்பந்தித்து மின் விளக்குகளை அறுத்தெறிந்து "கெடுபிடி" காட்டிய நிகழ்வும் நடைபெற்றது.
கடந்த 2023, 2024 ஆம் ஆண்டு பந்தலடியில் நடந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் வியாபாரிகளை எவ்வித கெடுபிடியும் செய்யாமல் உதவியும் செய்து சட்டம் ஒழுங்கையும் சிறப்பான முறையில் பேணிக்காத்து, வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்கினார்கள் என்பதும் நிதர்சனம்.
இதையும் படிங்க: தஞ்சையில் களைகட்டிய சலங்கை நாதம் கலை விழா!
இதேப்போன்று வருகின்ற மே 14 ஆம் தேதி புதன்கிழமை அன்று வியாபாரிகளுக்கு எந்தவித கெடுபிடியும் செய்யாமல் பந்தலடியில் கூடுதல் பாதுகாப்பு அளித்து கூத்தாண்டவர் திருவிழாவை சிறப்பாக நடத்திட காவல்துறை அதிகாரிகள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் பந்தலடியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் ஒருவித பயத்துடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள் தங்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தினால் அரசு சார்பில் நிழல் கூரைகள் அமைத்து உணவு வழங்கவும் கோரிக்கை வைக்கின்றனர். காவல் துறையின் கரிசனம் கிடைத்தால் மட்டுமே வியாபாரிகளின் வாழ்வு சிறப்பாய் அமைவதுடன், திருவிழாவும் சிறப்பாய் அமையும் என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.