தூத்துக்குடி: தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியில் தலைநகரமாக விளங்கும் தூத்துக்குடி, தென்னிந்தியாவின் உப்புத் தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுவது தூத்துக்குடி மாவட்டத்தில் தான். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலும், குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெறும். ஆனால், கடந்த 4 மாதங்களாக பருவம் தவறி பெய்து வரும் மழை மற்றும் கோடை மழை காரணங்களால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உற்பத்தி துவங்கும் பணி காலதாமதமாகியுள்ளது. இதனால், உப்பு பற்றாக்குறையை சமாளிக்க, குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி:
முதன் முறையாக தூத்துக்குடி உப்பு தொழில்துறை வரலாற்றில், குஜராத்திலிருந்து சுமார் 35 ஆயிரம் டன் உணவுக்கான உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சுமார் ஆயிரம் டன் உப்பு கண்டெய்னர் பெட்டிகள் குஜராத்திலிருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளன. மேலும், இறக்குமதி செய்யப்பட்டும் உப்பின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சேலம் அருகே பட்டாசு மூட்டை வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு |
இதுகுறித்து அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடம் தூத்துக்குடி. இங்கு மட்டும் 22 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்ற இடம். தெற்கு ஆசிய முழுவதும் உணவு உப்பு தேவையை பூர்த்தி செய்தது. ஆனால், தற்போது தூத்துக்குடிக்கே குஜராத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு கோரிக்கை:
இதனால், தூத்துக்குடி உள்ள உப்பள தொழிலாளர்கள் 50 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்டோர்கள் தினம் உணவுக்கு கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 14 ஆயிரம் பொருள்களின் உட்பொருளாக உப்பு உள்ளது. தற்போது தொழில் வளர்ச்சி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பிட்டவரை நினைத்து "கரிக்கும் வாழ்வு இனிக்க" செய்வதற்கான உப்பளத் தொழிலாளர்களின் நல வாரியத்திற்கான ஜிஓவை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இருந்து தென் மாநிலங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்தில் இருந்து வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.