சென்னை: தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே இரண்டாவது வாரம் வரை கோடை வெயில் கடுமையாக இருந்து வந்தது. இந்நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னையின் தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சிந்தாதிரிப் பேட்டை, பாரிமுனை, சென்ட்ரல், கடற்கரை சாலை, கடற்கரை, எண்ணூர், திருவெற்றியூர், சுங்கச் சாவடி, புதுவண்ணாரப்பேட்டை என சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலையில் தொடங்கும் மழையானது, இரவு 10 மணி நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென் மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்கி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும், அதே சமயத்தில் தமிழகத்திலும் அதன் தாக்கம் சில பகுதிகளில் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் இன்று ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும். இதன் காரணமாக நாளை (மே22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும், பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.