இரவில் நிகழும் வானியல் அற்புதமான சந்திர கிரகணத்தை எப்படி பார்க்கலாம்? அறிவியல் மையம் அசத்தல் தகவல்!
கிரகணம் வெறும் நிழல்களின் விளையாட்டு தான். அது மனிதர்கள், விலங்குகள் அல்லது உணவு பொருட்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. கிரகணம் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும். இதை தவறவிடாதீர்கள்.

Published : September 7, 2025 at 7:40 PM IST
சென்னை: 2025-ம் ஆண்டின் சந்திர கிரகணம் இன்றிரவு நிகழும் நிலையில் அதை எங்கிருந்து, எப்படி பார்க்கலாம்? என்பது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு. இதை நாம் அனைவரும் பாதுகாப்பாக எந்த தீங்கும் இல்லாமல் காணலாம்.
அதன்படி, இன்றிரவு (செப்டம்பர் 7) சந்திரன் பூமியின் நிழலால் சுமார் 85 நிமிடங்களுக்கு முழுமையாக மறைக்கப்படும். இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படும்.
பகுதி கிரகண கட்டத்தில், சந்திரன் மேலும் மேலும் மறைக்கப்படுவதை நாம் காணலாம். முழு கிரகணத்தின்போது, சந்திரன் உண்மையில் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும்.
இன்றிரவு 8.58 மணிக்கு சந்திரன் முதலில் பூமியின் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். இதை நம் கண்களால் பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
பின்னர் இரவு 9.57 மணிக்கு சந்திரன் இருண்ட கருநிழல் பகுதிக்குள் நுழையும். அப்போது நமது கண்களால் சந்திரன் மேலும் கிரகணம் அடைவதை மிக எளிதாக காணலாம்.
இரவு 11.01 மணி முதல் அதிகாலை 12.33 மணி வரை சந்திரன் முழுமையாக மறையும். நமது வளிமண்டலத்தில் இருந்து சூரிய ஒளி விலகுவதால் சந்திரன் வானத்தில் இருந்து முழுமையாக மறைவதற்கு பதிலாக அடர் சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும்.
அதிகாலை 1.26 மணிக்கு சந்திரன் கருநிழல் பகுதியை விட்டு முழுவதுமாக வெளியேறும். அதிகாலை 2.25 மணிக்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும்.

"நமது கண்களாலோ, தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ சந்திர கிரகணத்தை காண்பது முற்றிலும் பாதுகாப்பானது. கிரகணம் வெறும் நிழல்களின் விளையாட்டு தான். அது மனிதர்கள், விலங்குகள் அல்லது உணவு பொருட்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. கிரகணம் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும். இதை தவறவிடாதீர்கள். அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028 அன்று நிகழும்போதுதான் இனி பார்க்க முடியும்," என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.
| இதையும் படிங்க: ''கூட்டணியில் இருந்து அமமுகவை வெளியேற்ற திட்டமிட்டவர் நயினார் நாகேந்திரன்'' - டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு |
சிறப்பு ஏற்பாடு
இந்நிலையில் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரணத்தை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்த மையத்தின் செயல் இயக்குநர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''செப்டம்பர் 7 மற்றும் 8 ம் தேதி இரவு முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளில் இன்றிரவு 21.57 மணிக்கு (IST) தொடங்குகிறது.
முழுமையான சந்திர கிரகணம் இன்றிரவு 23.00 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 00:22 மணிக்கு முடிவடைகிறது. சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அற்புத வானியல் நிகழ்வை கண்டு களிக்கலாம். தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலம் கிரகணத்தை காணும்போது சந்திரனில் உள்ள பள்ளங்களை மிக நெருக்கமாக பார்க்கலாம்" என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

