சென்னை: அதிகார துஷ்பிரயோகம் செய்த புகாரின் பேரில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் நான்கு பேரை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில்,'நமது மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அதாவது, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பான 1998 ஆம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்நிலையில், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் 4 பிரதிநிதிகள் மீது அரசு, அச்சட்டத்தின் பிரிவு 52-ன்கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த ஆணையின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விவரம்:
- வ.பாபு, 189-வது வார்டு உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி.
- கே.பி.சொக்கலிங்கம், 5-வது வார்டு உறுப்பினர்,பெருநகர சென்னை மாநகராட்சி.
- ச.ஜெயபிரதீப், 40-வது வார்டு உறுப்பினர் மற்றும் 3-வது மண்டலக்குழுத் தலைவர், தாம்பரம் மாநகராட்சி.
- க.சகுந்தலா, 11-வது வார்டு உறுப்பினர் மற்றும் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர்.
பதவி பறிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் சென்னை மாநகராட்சியின் 5 -வது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், 189-வது வார்டு கவுன்சிலர் வ.பாபு ஆகிய இருவரும் திமுக கவுன்சிலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: EPS Vs OPS: "அவராகவே விலக வேண்டும்; இல்லையென்றால்.." - எச்சரித்த ஓபிஎஸ்!
சென்னை மாநகராட்சியில் 2022-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் இறந்துவிட்ட நிலையில், தற்போது 196 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் பலர், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், மின் கேபிள் பதிப்பு போன்ற திட்டப் பணிகளை முறையாக மேற்பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பில் இருந்து வருகிறது. பொதுமக்களின் புகார்களை அலட்சியப்படுத்துவதாகவும், கவுன்சிலர் என்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டுகள் உள்ளன.
மேலும் மேற்கூறிய பணிகளுக்கு கவுன்சிலர்கள் பணம் கேட்பதாகவும் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்கும் நோக்கிலும், கவுன்சிலர்களின அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் பதவி பறிப்பு எனும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.