சென்னை: பாலியல் புகார் விவகாரத்தில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரது பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை காவல் துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார். இவர் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. உத்தரவின் பேரில், விசாகா கமிட்டி நடத்திய முதல்கட்ட விசாரணையின் அறிக்கை டிஜிபி அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விசாகா கமிட்டி கொடுத்த அறிக்கை தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாலியல் புகார் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையர் மகேஷ் குமாரின், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. புகார்தாரரின் வேண்டுகோளின்படி, பாலியல் துன்புறுத்தல் புகார் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மகேஷ் குமார் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இந்த அறிக்கையை டிஜிபி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். அதன்படி, தமிழக உள்துறை, சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்க உத்தரவை ரத்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ் குமாரை ஈடிவி பாரத் தமிழ் ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, தற்போதுக்கு டிஜிபி அலுவலகத்தில் பணியில் இணையவுள்ளேன்." என்று அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்