கோயம்புத்தூர்: ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்தடைந்தார்.
ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 11) விமான மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்கிய சிறிது தூரம் நடந்து சென்று கட்சி தொண்டர்களின் வரவேற்பினையும் ஏற்றுக் கொண்டார். பின்னர் வாகனத்தில் ஏறிய முதலமைச்சர் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு புறங்களிலும் நின்று இருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பினை ஏற்றுக் கொண்டார். மேலும், அப்போது பொதுமக்கள் கொடுத்த புத்தகங்கள் மற்றும் சால்வைகளையும் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து முதலமைச்சர் சாலை மார்க்கமாக ஈரோடு வழி திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, முதலமைச்சர் மேட்டூரில் ஓய்வு எடுக்கிறார். இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணி அளவில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து, சேலத்தில் நடைபெறக் கூடிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதற்கு முன் மாலையில் 11 கிலோ மீட்டருக்கு ரோட் ஷோ செல்லவிருக்கிறார்.
இதையடுத்து அடுத்த இரு நாட்கள் ஈரோடு, சேலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்புவார்.
கோவைக்கு வருகை புரிந்த நலத்திட்ட நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களுக்கு, வழியெங்கும் பெரும் திரளாக பொதுமக்கள் கூடி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.. pic.twitter.com/GP187LCoAc
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 11, 2025
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில், பல்வேறு அரசு நிகழ்வுகளில் மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்றதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டு கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் வரவேற்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.