சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 17) நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நீட், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த பேரவை உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தொடருக்கு இடையே தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 17 ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி, நீட் விலக்கு, மும்மொழிக் கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் திமுக - பாஜக காரசார விவாதம்
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மக்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களும், அறிவிப்புகளும் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பது தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புதிதாக துவங்கப்பட உள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தொடரில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு நாளை மறுநாள் மீண்டும் இக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.