திருப்பூர்: பெங்களூருவில் நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் திருப்பூரைச் சேர்ந்த 28 வயது பெண்ணும் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 3 அன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர், தனது முதல் கோப்பையை வென்றது.
முண்டியடித்த ரசிகர் கூட்டம்
இந்த நிலையில், கோப்பையை வென்றதற்கான வெற்றி கொண்டாட்டம் மற்றும் பாராட்டு விழா நேற்று (ஜூன் 4) மாலை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக, மாலை 5 மணியளவில் ஆர்சிபி அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே திரண்டனர்.
அதனால், சின்னசாமி மைதானத்திற்கு வெளியே இருந்த சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அதாவது, மைதானத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க முடியும் என்ற பட்சத்தில், விதான் சௌதா முன்பு ஒரு லட்சம் பேரும், சின்னசாமி மைதானம் முன்பு 3 லட்சம் பேரும் கூடியனர்.
அதில் டிக்கெட் இல்லாத ரசிகர்களும் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சுவாசிக்க முடியாமல் பலர் மயங்கி விழுந்தனர். அப்படி தரையில் விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்ததில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் பெண் உயிரிழப்பு
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளரான மூர்த்தியின் மகள் காமாட்சி தேவி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். 28 வயதான காமாட்சி தேவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் தங்கி, அமேசான் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் கொண்டாட்ட விழாவில் பங்கேற்க மகிழ்ச்சியுடன் சென்ற இவர், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்துள்ளார். வெற்றி களிப்பில் இருந்த ரசிகர்கள் அதனை கவனிக்காமல் காமாட்சியை ஏறி மிதித்துள்ளனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காமாட்சி தேவியின் உடல் இன்று மதியம் 2 மணியளவில், சொந்த ஊரான உடுமலைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குணசித்திர நடிகர் இலைக்கடை முருகன் உடல்நலக்குறைவால் காலமானார் - சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமானவர்! |
இவரது தந்தை மூர்த்தி உடுமலை தமிழிசை சங்கத்தின் இணைச் செயலாளராகவும், மைவாடி விவேகானந்த வித்தியாலயத்தின் தாளாளருமாகவும் உள்ளார். இந்த நிலையில், உடுமலை வரும் பெண்ணின் உடலுக்கு தமிழிசை சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த சோக நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.