திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரை நேற்று (ஏப்ரல் 15) வகுப்பறையில் வைத்து அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து படுகாயமடைந்த மாணவரை பள்ளி நிர்வாகம் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமத்தனர்.
இந்நிலையில் அவருக்கு பள்ளி நிர்வாகம் மருத்துவமனை செலவை ஏற்க மறுப்பதால், பாதிக்கப்பட்ட மாணவரின் சிகிச்சை தாமதமாகி வருவதாக கூறி நேற்று மாலை மாணவரின் பெற்றோர், உறவினர்கள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் திடீரென மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து. போராட்டம் நடத்தும் முடிவு கைவிடப்பட்டது.

இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை நிஜாமுதீன், “மருத்துவமனை செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. அதனால், எனது மகனின் சிகிச்சை தாமதமாகிறது. ஆனால். உண்மையில் எங்களுக்கு எந்த ஆதரவு கிடைக்கவில்லை. என் மகனுக்கு காலையில் இருந்து முதலுதவி மட்டுமே கொடுத்தனர். தற்போது தான் ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்றார்கள்.
தலையில் ஆழமாக வெட்டு உள்ளது. இவ்வளவு பிரச்னை இருந்தும் பள்ளி நிர்வாகத்தினர் எங்களிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆறுதல் கூட சொல்ல வரவில்லை. அரசு அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை. என் மகனை அந்த மாணவர் ஏன் இப்படி செய்தார் என தெரியவில்லை. ஆனால், திட்டமிட்டு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும். என் மகனை வெட்டிய மாணவர் பள்ளியில் இருந்து காவல் நிலையம் சென்று சரணடைந்திருக்கிறார். அப்போது அவர், “நான் அவனை சாகடித்துவிட்டேன், போய் பாத்துக்கோங்க” என கூறியுள்ளார். இதன் பின்னணியில் கண்டிப்பாக பென்சில் விவகாரம் மட்டும் இல்லை வேறு ஏதேனும் இருக்கிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “எட்டாம் வகுப்பு மாணவன் சக மாணவனை வெட்டி விட்டு தனியாக காவல் நிலையம் செல்லும் அளவிற்கு 14 வயதில் எப்படி அந்த யோசனை வந்தது? எனவே மாணவனின் பின்னணி குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உதவிகளை பள்ளி நிர்வாகம் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகமும் இதில் முழு உதவிகளை செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
நடந்த சம்பவம்
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அங்கு எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவர் நேற்று (ஏப்ரல் 15) வகுப்பறையில் வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க |
அப்போது திடீரென ஒரு மாணவர் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மற்றொரு மாணவனை சரமாரியாக வெட்டியதால் வகுப்பறையே போர்க்களமாக மாறியது. இதையடுத்து படுகாயமடைந்த மாணவரை பள்ளி நிர்வாகம் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமத்தனர்.
தொடர்ந்து, தாக்குதல் சம்பவம் நடத்திய மாணவரை பாளையங்கோட்டை போலீசார் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய நிலையில், மாணவருக்கு நீதிபதி வரும் 29ஆம் தேதி வரை 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த மாணவர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.