திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் நேற்று (ஏப்ரல் 15) செவ்வாய்க்கிழமை காலை எட்டாம் வகுப்பு மாணவர் தனது புத்தகப் பைக்குள் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்து வகுப்பறைக்குள் கொண்டு வந்துள்ளான்.
அப்போது, சக மாணவரோடு ஏற்பட்ட சிறிய பிரச்சினைக்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவரைத் தாக்கினார். இதையடுத்து பள்ளி வகுப்பறை போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் திருநெல்வேலி மட்டுமல்லமாமல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தலின்படி இன்று முதல் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளின் பைகளைச் சோதனையிட்ட பிறகே பள்ளி வளாகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று சம்பவம் நடந்த பள்ளியில் காலை முதல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவிகள் அனைவரின் புத்தகப் பைகளை ஆசிரியர்கள் ஒரு குழுவாக இருந்து பை முழுவதையும் சல்லடை போட்டு சோதனை செய்த பிறகே வகுப்பறைக்குள் அனுமதித்தனர்.
நடந்தது என்ன?
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த மாணவரைப் பள்ளி நிர்வாகம் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதற்கிடையே, தாக்குதல் நடத்திய மாணவரை பாளையங்கோட்டை போலீசார் இளம்சிறார் நீதிக் குழுமத்தின் நடுவர் முன் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதி, மாணவரை வரும் 29ஆம் தேதி வரை 14 நாட்கள் கூர்நோக்கு இல்லத்தில் காவலில் வைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகமோ, அரசு சார்பில் அதிகாரிகளோ எந்த ஆறுதலும் கூறவில்லை. மருத்துவமனை செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணம் பென்சில் சண்டைபோல் தெரியவில்லை. இதன் பின்னணியில் யாரோ உள்ளார்கள். அரசு இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
விசாரணையில் வழக்கு
இந்த சம்பவம் குறித்து பேசிய உதவி ஆணையர் சுரேஷ், “ஏற்கனவே பென்சில் வாங்கியதில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த முன் விரோதம் காரணமாக இன்று மாணவனை வெட்டியதாக தெரிய வந்துள்ளது. முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவனுக்கு மூன்று இடத்தில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. தடுக்க சென்ற ஆசிரியருக்கும் லேசான வெட்டு காயம் உள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர்,” என்றார்.
இதையும் படிங்க: |
1. "பொன்முடி மீது இதுவரை எஃப்.ஐ.ஆர் கூட பதியப்படவில்லை" - பாஜக அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு! 2. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு பின்..! டிடிவி தினகரன் சொன்ன காரணம்! |

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.