கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியில் இருந்து பாய்ந்து வந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த ரம்ஜான் தைக்கால் ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த உபயத்துல்லா (8), முகமது அபில் (10), அப்துல் ரகுமான் (13) ஆகியோர் நண்பர்கள். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்தனர்.
இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால், வீராணம் ஏரியின் வடிகாலான வெள்ளையங்கால் ஓடைக்கு சென்றுள்ளனர். அப்போது வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஓடையில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. இதனை பார்த்த சிறுவர்கள், ஆர்வ மிகுதியில் அதில் இறங்கி குளித்தனர்.
அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால், அவர்களுக்கே தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனால் பயந்துபோன அவர்கள், கரைக்கு வர முயன்றனர். ஆனால், நீர் வேகமாக ஓடியதால் அவர்களால் கரைக்கு வர முடியவில்லை. இதனால் தண்ணீரில் தத்தளித்த அவர்கள் அப்படியே மூழ்கினர். இதனை தொலைவில் இருந்த பார்த்த சிலர், அங்கு உடனடியாக சென்று சிறுவர்களை தேடினர். ஆனால், சிறுவர்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவர்கள் காட்டுமன்னார்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் சிறுவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 3 சிறுவர்களின் உடல்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. சிறுவர்களின் சடலங்களை பார்த்து பெற்றோர்களும், ஊர் மக்களும் கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கலங்கச் செய்தது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.