தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடந்த இரட்டைக் கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (20) என்பவரை நேற்று ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக பிரகதீஸ்வரனை, கோவில்பட்டி புதுகிராமம் செண்பகா நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரனுக்கும், சதீஷுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில், நேற்றிரவு சதீஷை தேடி அவரது வீட்டுக்கு சென்ற ஒரு கும்பல், அங்கிருந்த சதீஷின் தாயான கஸ்தூரியை (46) கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரகதீஸ்வரனின் உறவினர்களும், நண்பர்களுமே கஸ்தூரியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக் கொலை.. ஒருதலை காதலால் இளைஞர் கொடூரம்! அதிர்ந்த பொள்ளாச்சி! |
இதனிடையே, ஒரே இரவில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை சம்பவங்கள் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:
கோவில்பட்டியில் நடந்த இரட்டை கொலை சம்பவங்களில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலை சாதிரீதியான கொலையோ அல்லது இரு ரவுடி கும்பல்களுக்கு இடையேயான கொலையோ கிடையாது. இரு நண்பர்கள் இடையே ஏற்பட்ட திடீர் தகராறு காரணமாக நிகழ்ந்த கொலைகள். இந்தக் கொலை நடந்த 15 நிமிடங்களுக்குள் கோவில்பட்டி டிஎஸ்பி தலைமையிலான சுமார் 90 போலீசார், அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் குற்றவாளிகளை தப்பவிடாமல் கைது செய்தனர். எனவே தான், இந்த பிரச்சனை பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினையாக மாறவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு 30 சதவீதம் குறைவாகவே கொலைக் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. மேலும், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு போலீசார் உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, குற்ற செயல்களில் ஈடுபடுவோர் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 லட்சம் மக்கள்தொகை உள்ள நிலையில், அவர்களில் சுமார் 5,000 பேர் தான் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். அவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல, தூத்துக்குடியில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.