பெரம்பலூர்: பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிகவே அவர்களுடன் மீண்டும் கூட்டணி வைக்க சிந்தித்து வரும் நிலையில் அமித் ஷாவுக்கு தவெக விஜய் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்ற ஆசை உள்ளது என விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விமர்ச்சித்துள்ளார்.
விசிக பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று பெரம்பலூருக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் முடியும் வரை இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். பாஜக தனது கூட்டணியை வலுப்படுத்த நினைக்கிறது.
ஏற்கனவே அவர்களுடன் கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக கட்சிகள் கூட அவர்களுடன் இணைவதற்கு தயக்கம் காட்டுகின்றன. இந்த நிலையில் பாஜகவுக்கு தவெக விஜய் அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. பாஜகவிற்கு கூட்டணி சேர்ப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. இதில் ஆட்சியை கைப்பற்றுவது குறித்தும் கனவு காண்கிறார்கள். இதை பார்த்தால் நகைச்சுவையாக உள்ளது. ஆனால், மறுபுறம் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என கூறுவது அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சூதாட்டத்தின் பகடையாகப் பயன்படுத்திவிடுவார்களோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் பிற மாநிலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியா முழுவதும் வாக்குச் சீட்டுப் பதிவு முறையை நடைமுறைபடுத்த வேண்டும். வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. பாஜக செய்யும் இந்த முறைகேட்டை பல வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆகவே வாக்குப்பதிவு எந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் மட்டுமே பாஜக-வால் தமிழ்நாட்டில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற முடியும்” என்றார்.
இதையடுத்து மதுரை ஆதீனம் அமித் ஷாவிடம், “கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தது வரவேற்கத்தக்கது. ஆனால், பாஜக இந்த கோரிக்கையை நிறைவேற்றாது. பாஜக ஈழத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் மட்டும் தான் வடிப்பார்கள்.
இதையும் படிங்க: ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு 10 நிமிடங்களில் தீர்வு - முப்படைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு! |
பாஜக முருக பக்தர்கள் மாநாடு மூலம் வாக்குகளை சம்பாதிக்க நினைத்தது. ஆனால், முருக பக்தர்கள் மதவாத அரசியலை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு மக்களை ஏமாற்றுவது, இந்திய மக்களை ஏமாற்றுவது போல சுலபமான விஷயமல்ல. மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.