திருவண்ணாமலை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று திருவண்ணாமலை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதல்முறையாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து ரமண மகரிஷி ஆசிரமத்தில் மக்களோடு மக்களாக மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "தமிழ்நாடு ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டார். ஆளுநர் ரவி சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதை சுட்டிக்காட்டி 10 மசோதாக்களை அங்கீகரித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஆளுநருக்கு பாடம் புகட்டும் தீர்ப்பாகவும் உள்ளது. 10 மசோதாக்களின் மீது நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு இந்தியாவுக்கே வழிகாட்டும் தீர்ப்பாக பார்க்கிறேன்,'' என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன்," தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நீட் மசோதா விவகாரத்தை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லும். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்த திருமாவளவன் கோவையில் பள்ளி மாணவிக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாயை காரணம் காட்டி தனியாக அமரவைத்து தேர்வு எழுத வைத்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது," என்றார்.
இதையும் படிங்க: "எனக்கு பதவி ஆசை இல்லை; அன்புமணியின் பதவி பறிப்பு ஏன்?" - பாமக தலைவர் ராமதாஸ் விளக்கம்!
மேலும், "இதுபோன்ற சம்பவம் பள்ளி வளாகத்தில் நடைபெறுவது கவலை அளிப்பதாகவும், இந்த சம்பவத்தில் அங்கு பொறுப்பில் இருந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
பின்னர் 2026 தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, '' முதலில் கூட்டணி உருவாகட்டும். தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் தலைவர் யார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் பாஜகவின் தலைவர் விவகாரத்தில் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது'' என்றார்.
தொடர்ந்து, '' இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன் முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதிலும் சாதிவாரி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திருமாவளவன், பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, சட்டென்று யோசிக்காமல், '' பாமக விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை.'' என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்