சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள தெருக்களில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய எம்எல்ஏ பரந்தாமன், "எழும்பூர் தொகுதியில் உள்ள முருகேசன் தெருவில் புதிய மின்மாற்றி அமைக்க அரசு முன்வருமா?," என கேட்டார். இதற்கு பதில் அளித்ந அமைச்சர் செந்தில் பாலாஜி, "எழும்பூர் மின்தேவையை கருத்தில் கொண்டு 100 கிவா மின்மாற்றி ஏப்ரல் மாதத்துக்குள்ளாக அமைத்து தரப்படும். இதேபோல பல்லாவரம்,மயிலம்,ஆலங்குளம்,திருவள்ளூர். உள்ளிட்ட பகுதிகளிலும் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்,"என்று பதில் அளித்தார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய எம்எல்ஏ உதய சூரியன், "மலை பகுதிகளில் மழைகாலங்களில் மின்கம்பங்கள் விழுந்துவிடுவதால் பழுது சரி செய்ய நீண்ட நேரம் ஆகிறது. எனவே மலைப்பகுதிகளில் புதைவட கம்பி அமைக்க வேண்டும்,"என கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "மாநகராட்சிகளில் புதைவட கம்பி அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்கும்படி முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் மாடல்; நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம்!
குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட தெருக்களில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த கட்டமாக மலைப்பகுதிகளில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி நிதி நிலைமைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும்,"என்றார்.
நூலகங்கள் புனரமைப்பு: கேள்வி நேரத்தின்போது பேசிய பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, "பாபநாசம் தொகுதி ராஜகிரியில் உள்ள கிளை நூலகத்திற்க்கு கட்டடம் கட்ட அரசு முன்வருமா?" என கேட்டார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "புதிய நூலகங்களுக்கு கட்டடம் கட்ட 2025-26ஆம் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாழடைந்த நூலக கட்டடத்துக்கு மாற்றாக வேறு ஒரு நூலகம் கட்டடம் அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள்.
ஏற்கனவே 6 கிளை நூலகங்கள், 6 ஊர்புற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் 821 நூலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் 29 மைய நூலகங்களும் ,68 முழு நேர நூலகங்களும் ரூ 27.06 கோடி செலவில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியிலேயே நீங்கள் கேட்ட நூலகத்தின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்,"என்று பதில் அளித்தார்.