BY - இரா. சிவக்குமார்
மதுரை: தொழில்நுட்ப வளர்ச்சி, கார்ப்பரேட் ஊடுருவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் சலவை தொழிலாளர்களும் அடங்குவர். இது தவிர இயற்கையும் கூட ஆண்டுதோறும் சலவை தொழிலுக்கு தடையாக அமைந்து விடுகிறது. ஆடைகளை துவைப்பதில் தொடங்கி சலவை செய்து அதனை மடிப்பது வரை மழைக் காலங்களில் பெரும் நெருக்கடி தான். இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களும் சலவைக்கு துணிகளை கொடுப்பதில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாகிறது. மாற்றம் கண்டு ஏற்றம் பெற்று வரும் சமூகத்தில் சலவை தொழிலாளர்களின் நிலைமை இப்போது எப்படி உள்ளது? என்பதை பார்க்கலாம்.

சலவைத் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் எம்பிசி பட்டியலிலும், மற்றொரு பிரிவினர் எஸ்சி பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளதால், சமூகநீதியில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் தமிழ்நாடு வண்ணார் பேரவையின் நிறுவனத் தலைவர் மணி பாபா. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு சமூகமாக சலவை தொழிலாளிகள் இருந்து வருகின்றனர். சாதி அடுக்கில் கடைக்கோடியில் வாழ்ந்து வந்தாலும் மனித வாழ்வியலில் தவிர்க்க முடியாத அங்கமாக சலவைத் தொழிலாளர்கள் திகழ்கின்றனர். ''ஆள் பாதி ஆடை பாதி'' என்பதில், ஆள் பாதியில் இருந்து மீதி பாதியை சலவைத் தொழிலாளர்களே ஒரு மனிதனுக்கான தேவையை நிறைவேற்றுகின்றனர். நாடு விடுதலை பெற்ற பிறகு அனைத்து சாதியினரும் முன்னேறி வருகின்ற போது சலவை தொழிலாளர்கள் மட்டும் இன்னும் கடைநிலையிலேயே உழன்று வருகிறார்கள் என்கிறார் மணி பாபா.

மழைக்காலங்களில் நிவாரணம் வேண்டும்
அது மட்டுமன்றி, காலங்காலமாக இவர்கள் செய்து வரும் தொழிலை கூட தற்போது கார்ப்பரேட் விட்டு வைக்கவில்லை. அடித்தட்டில் உழலும் இந்த மக்களுக்கான தேவைகளை இந்த அரசு செய்து தர மறுக்கிறது.
இது தொடர்பாக பேசிய மணிபாபா, "கடந்த மே 25ம் தேதி கோவையில் எங்களது சமூகத்தின் மாநில மாநாட்டை நடத்தினோம். அதில் பல தீர்மானங்களை இயற்றினோம். அதில் குறிப்பாக மழைக்காலங்களில் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு மட்டுமே எங்களது மூலதனமாக இருக்கின்றபடியால் தொடர்ச்சியாக மழை பெய்கின்ற காலங்களில் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது.
'சமூக நீதியாகாது'
அதே போன்று சாலையோரங்களில் துணி தேய்க்கும் பணி மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு இரும்பு கூண்டாலான வண்டியை இலவசமாக வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட துணி தேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள சலவைத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கியாஸ் அயர்ன் பெட்டி வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு வெறும் 1,200 கியாஸ் பெட்டிகளை மட்டுமே வழங்கி உள்ளது. அடுப்புக்கரி பயன்படுத்துவதில் மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது. வாடிக்கையாளரின் அவசர தேவையை நிறைவேற்ற முடியாத சூழலில் அவர்களின் வாடிக்கையாளர்கள் விட்டுப் போவதற்கு வாய்ப்பு உருவாகிறது. எம்பிசி பட்டியலில் பிற ஆதிக்க சாதியினர் உள்ள போது ஒடுக்கப்பட்ட சலவை தொழிலாளர் சமூகம் அந்த பட்டியலில் நீடிப்பது என்பது சமூகநீதியாகாது.
மத்திய அரசின் விஸ்வகர்மா போன்ற குலத்தொழில் முறையை தமிழக அரசு ஏற்கவில்லை என்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரம் எங்களுக்கு உரிய பாதுகாப்பினை தரும் வண்ணம் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசை வேண்டுகிறோம்'' என்றார்.
பெண்கள் பணி அதிகம்
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை மகளிர் அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளர் மகேஸ்வரி கூறுகையில், ''மழைக்காலத்தில் துணி தேய்க்கின்ற பணிகள் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகின்றன. மழைக் காலத்தில் வண்டி போட முடியாது, சலவை செய்ய முடியாது. இந்த நேரத்தில் எங்களுக்கான வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். கடுமையான வெயில் காலங்களில் கூட சாலை ஓரங்களில் நாங்கள் பணி செய்து கொண்டிருக்கிறோம். இதில் பெண்கள் பணி அதிகம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். அதற்கான மருத்துவ செலவும் எங்களுக்கு அதிகமாகிறது. இதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்'' என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்