சென்னை: 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென டெல்லி சென்றார். அங்கு அவர் அதிமுக அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பரபரப்பாக்கிய ஊடகங்கள்: இதையடுத்து டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி கே எம் சின்னய்யா, சோமசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன், தன்சிங் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் சந்தித்ததை யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஊடகங்கள் தான் இந்த சந்திப்பை பரபரப்பான செய்தியாக்குகின்றன. நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏன் சந்தித்தேன் என்பது குறித்து ஏற்கனவே அனைவருக்கும் தெளிவுபடுத்திவிட்டேன்.
இதையும் படிங்க: எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு: ‘எல்லாம் நன்மைக்கே’ என சிரித்தபடி சென்ற ஓபிஎஸ்!
சூழ்நிலைக்கு ஏற்ப மாறும்: டெல்லி சென்றவுடன் அங்கு கட்டப்பட்டுள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகத்தை நான் பார்வையிட்டேன். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நானும் மூத்த நிர்வாகிகளும் சேர்ந்து சந்தித்தோம். அப்போது தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது குறித்த கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினோம். பாஜக உடன் கூட்டணி இல்லை என கூறி இருக்கின்றேன். இப்போது ஏன் சந்திப்பு நடந்தது என்று கேட்டால், கூட்டணி விவகாரத்தில் எந்த கட்சியாவது நிலையாக இருந்துள்ளதா? திமுக கூட்டணி கட்சிகள் நிலையாக உள்ளனவா? அரசியலில் இதையெல்லாம் சரியாக சொல்ல முடியாது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு அரசியலில் மாற்றம் இருக்கும்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தேர்தல் நெருக்கத்தில் தான் கூட்டணி குறித்து நாங்கள் அறிவித்தோம். அதே போல் தற்போது தேர்தல் நெருக்கத்தில் தான் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து ஒத்த கருத்துகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அதிமுக கூட்டணி முடிவு செய்த பின்னர் அனைத்து ஊடகங்களையும் அழைத்து நிச்சயம் அது குறித்து தெரிவிப்போம். அதிமுகவை பொறுத்தவரை திமுகவை வீழ்த்துவது தான் எங்களது ஒரே குறிக்கோளாகும். மக்கள் விரோத திமுக ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும். அது தான் எங்களது இலக்கு. அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்,"என்றார்.