சென்னை: ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு என்ற ஹேமகுமார். இவர் மந்தைவெளியில் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி (56), என்பவருக்கு சொந்தமான லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரோடு தாம்பரம் சானடோரியம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் டிரைவராக வேலை பார்த்தார்.
கண்ணன் டிரைவர் மட்டுமல்லாமல் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களை பராமரிப்பது, சர்வீஸ் செய்வது போன்ற பணிகளையும் கவனித்து வந்தார். இதன்மூலம் அவர், முறைகேட்டில் ஈடுபட்டதாக நிறுவன உரிமையாளரிடம் பாபு புகார் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக கண்ணன் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் பாபு மற்றும் கண்ணன் ஆகியோருக்கு இடையே விரோதம் ஏற்பட்டது.
பின்னர் சில மாதங்களுக்கு பின்பு தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூர்த்தி (21) ஆகியோருக்கும் பாபு மீது விரோதம் ஏற்பட்டது. இதை அறிந்த டிரைவர் கண்ணன், அவர்களுடன் கூட்டு சேர்ந்து பாபுவை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையும் படிங்க: காதலியுடன் சேர்ந்து கல்லா கட்டிய ஏட்டு.. அரசு அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி.. தென்காசி ஷாக்
இதற்கு கிருஷ்ணமூர்த்தி, பிரதீக் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் ஆதரவு தெவித்துள்ளனர். அதன்படி, கடந்த 2010ம் ஆண்டு குரோம்பேட்டை செல்ல வேண்டும் எனக்கூறி பிரதீக் கிருஷ்ணமூர்த்தி, பாபுவை காரில் அழைத்து சென்றுள்ளார். அங்கு தயாராக இருந்த கூலிப்படையினருடன் சேர்ந்து பாபுவை கொலை செய்துவிட்டு அவரது உடலை காரில் கொடைக்கானல் எடுத்து சென்றனர்.
பின்னர், மலைப்பகுதியில் உடலை வீசி விட்டு சென்னை திரும்பினர். இதற்கிடையே பாபுவின் தந்தை அன்பழகன் தனது மகனை காணவில்லை என சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறை விசாரணை நடத்தி பாபுவின் உடலை கொடைக்கானல் மலையில் இருந்து மீட்டனர். பின்னர், கிருஷ்ணமூர்த்தி, பிரதீக் கிருஷ்ணமூர்த்தி, டிரைவர் கண்ணன்(37), பல்லாவரம் பச்சையம்மன் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (32), பல்லாவரம் தர்கா சாலையைச் சேர்ந்த ஜான் (33), வேளச்சேரி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில் (27) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணமூர்ததி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், மொத்தம் 14 லட்சம் ரூபாயும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராத தொகையில், 10 லட்சம் ரூபாயை கொலையான பாபுவின் பெற்றோருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நீதிபதி தனது தீர்ப்பில், 'முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் நிச்சயமாக சமூகத்திற்கு அச்சுறுத்தலாகவே இருப்பார்கள். இவர்களுக்கு எந்தவிதத்திலும் கருணை காட்ட முடியாது. அவ்வாறு கருணை காட்டுவது என்பது சமுதாயத்துக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதல் ஆகி விடும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்