தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மி அம்மன், ஸ்ரீ வெள்ளை அம்மன் கோயிலில் வரும் ஜூன் 13ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனாக 35 அடி உயரம் கொண்ட அரிவாளை கோயில் வளாகத்தில் நிறுவியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாளியக்காடு கிராமத்தில் ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மி அம்மன், ஸ்ரீ வெள்ளை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை மாளியக்காடு கிராமவாசிகள் மற்றும் குலதெய்வக்காரர்கள் இணைந்து பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கட்டுமான பணிகள் முடிந்து ஜூன் 13ஆம் தேதி கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், அந்த கோயிலின் மதுரை வீரன் சாமியை குலதெய்வமாக கொண்ட ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மதுரை வீரனுக்கு பிரமாண்ட அரிவாளை நிறுவ நினைத்து சுமார் ரூ.2 லட்சம் செலவில், 35 அடி உயரம் கொண்ட அரிவாளை நேற்று (ஜீன் 8) கிரேன் உதவியுடன் கோயில் வளாகத்தில் நிறுவினார்.
இந்த அரிவாள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள அரிவாள் பட்டறையில் ஆர்டர் செய்து, ஒரு வார கால தாயாரிப்புக்கு பின் இங்கு லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. இந்த அரிவாளின் கைப்பிடி நீளம் 10 அடி, அகலம் நுனியில் ஒன்றே முக்கால் அடியில் தொடங்கி ஆறரை அடியில் முடிவடைகிறது. இந்த பிரம்மாண்ட அரிவாளை அப்பகுதி பொதுமக்கள் பிரமிப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த கோயிலில் நிறைவேற்றப்படும் நேர்த்திக்கடன் குறித்து பக்தர்கள் கூறுகையில், “இங்குள்ள மதுரை வீரன் சக்தி வாய்ந்த சாமியாக பார்க்கப்படுகிறது. திருவிழா காலங்களில் மதுரை வீரன் அரிவாள் மீது நின்று வாக்கு கூறுவது வழக்கம். அதனால், அரிவாளை வைத்து இங்கு பூஜையும் நடக்கும். இந்நிலையில் இந்த கோயில் தற்போது புதுப்பிக்கப்படுவதால், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர் ஒருவர் அனைவரின் சார்பிலும் சாமிக்கு அரிவாள் நிறுவியுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம்... கம்பி வேலிக்குள் புகுந்த இளைஞர்! தொடர் சர்ச்சையில் குணா குகை!! |
இதுகுறித்து கூறிய அரிவாளை தயாரித்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த அரிவாள் பட்டறைக்காரர்கள், “திருப்புவனத்தில் 10க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 அடி முதல் 21 அடி உயரம் கொண்ட அரிவாள் தான் பெரும்பாலும் தயாரிக்கப்படும். தற்போது 35 அடி உயர அரிவாளை தயாரித்துள்ளோம். இதை தயாரிக்க 10 நாட்களுக்கு மேலாக ஆகிவிட்டது” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.