தஞ்சாவூர்: இந்தியாவில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் கீழ் 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியில் பொது இடங்களில் 246 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாநகரில் குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை உடைப்பு, கழிவு நீர், குப்பைகள் தேங்குதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அந்தப் பிரச்சனைகளை சரி செய்ய முடியும். இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டு அதன் மதிப்பீடு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2024- 2025ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகள் செய்யப்பட்டு கடந்த 9ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியானது.
இதில் தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் மாநகராட்சி முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 14வது இடத்தையும் பிடித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் ராமநாதன் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியின் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதாள சாக்கடை பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, குப்பை அகற்றுதல், பொது அறிவிப்பு போன்றவை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு உரிய அறிவுரை வழங்கப்பட்டு பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படுகிறது.
மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் குடிநீர் தினசரி பயன்பாடு குறித்தும், தெரு மின்விளக்குகள், சோலார் மின்விளக்குகள் பயன்பாடு குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில், தணிக்கை செய்யப்பட்டு, அதன் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு அகில இந்திய அளவில் தஞ்சை மாநகராட்சி 41வது இடத்தில் இருந்தது, தற்போது 14வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் பூட்டிய வீட்டிற்குள் மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த பெண் ஆயுதப்படை காவலர்! என்ன நடந்தது?
அதேபோல் தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளில் தஞ்சை முதலிடத்தை பெற்றுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது" என கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மண்டல தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா மற்றும் ரம்யா சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்