தஞ்சாவூர்: மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களை அதிகளவில் தயார் செய்ய வைத்து தேர்வில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கம் மற்றும் லட்சியத்துடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியோடு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக வரும் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கூடுதலானவர்கள் வெற்றி பெற்று அரசு பணிக்கு அனுப்பி வைக்கும வகையில் 3 மாதம் தொடர் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கான நுழைவுத் தேர்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 6) கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 6 முக்கிய இடங்களில் நடைபெற்றது. இதில், நுழைவு தேர்வு எழுத 1500க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தும் மாவட்டம் முழுவதும் 600 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வு எழுதினர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் நுழைவு தேர்வு நடைபெற்ற அல் அமீன் பெண்கள் கலை அறிவியல் கல்லூரிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் துணை ஆட்சியர் சங்கரநாராயணன் ஆகியோர் வருகை தந்து தேர்வர்களை அரசு பணிக்கு வர வேண்டும் என ஊக்கப்படுத்தி பேசி உற்சாக மூட்டினார்.
இதன் பிறகு துணை ஆட்சியர் சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெறும் இந்த புதிய முயற்சியின் வாயிலாக இன்று தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்களை பெறும் வகையில் 6 மையங்களில் இலவச பயிற்சி 3 மாதம் தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த மையங்களில் குறைந்தபட்சம் 4 பயிற்றுனர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர். ஒவ்வொரு நாளும் அனைத்து பாடங்களும் எடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் சிறு தேர்வுகளும், வாராந்திர தேர்வுகளும் நடத்தி அவர்களின் திறன் அவ்வப்போது பரிசோதித்து அவர்களுக்கும் அது பகிரப்படும். அதன் வாயிலாக இன்னும் அவர்கள் எவ்வளவு கடினமாக பயிற்சி பெற வேண்டும்? படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்.
இதையும் படிங்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு!
இந்த திட்டத்தின் ஒரே நோக்கம் மற்றும் லட்சியம் தஞ்சை மாவட்டத்தில் இருந்து அதிக நபர்கள் அரசு பணிக்கு கொண்டு வருவதே. தொடர்ந்து இதுபோலவே ஆர்ஆர்பி, எஸ்.ஐ தேர்வுகளுக்கும் இந்த இலவச பயிற்சிகளை அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.'' என்று துணை ஆட்சியர் சங்கர நாராயணன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்