தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் கௌரவ உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம். இதற்கு ஏப்ரல் 15 கடைசி நாளாகும். விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் கௌரவ உதவித்தொகை, மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி ஊக்குவித்து மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
மத்திய அரசு வழங்கும் பிரதமரின் கௌரவ உதவித்தொகை விவசாயிகள் அல்லாதவர்களுக்கு சென்று விடக்கூடாது என்ற நோக்கத்துடன், இணைய வழியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு இந்த உதவித்தொகைே நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
அரசின் திட்டங்களில் விவசாயிகள் அல்லாத நபர்கள் பயனடைய கூடாது என்பதற்காக ஒவ்வொரு விவசாயிக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை வேளாண்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகிய துறையினர் வாயிலாக அனைத்து கிராமங்களிலும், முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை சுமார் 92,000 விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்ஃபோன் எண்ணுடன் அரசு அலுவலர்களையோ அல்லது பொதுசேவை மையங்களையோ ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, விவசாயிகள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும்.
இதுவரை 4 மாதங்களுக்கு ஒருமுறை என 19 தவணைகளாக பிரதமரின் கௌரவ உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20வது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும். தனி அடையாள எண் பெற பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு 20வது தவணை வங்கிக் ணக்கில் இருப்பு வைக்கப்படாது. மேலும் இதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்துள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் பூட்டிய வீட்டிற்குள் மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த பெண் ஆயுதப்படை காவலர்! என்ன நடந்தது?
எனவே விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இனியும் காலம் தாழ்த்தாமல் பிரதமரின் கௌரவ உதவித்தொகை பெறவும் மற்ற ஏனைய மானியங்களை பெறவும் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி விரைவாக தனி அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.