கோயம்புத்தூர்: ஜவுளி நிறுவனங்களில் இருந்து கூலி உயர்வு வேண்டி விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டம் நடத்திவரும் 12 பேரில் இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.
இது கைது நடவடிக்கையாக இருக்குமோ என்ற அச்சத்தில், இரவோடு இரவாக 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தோடு போராட்டப் பந்தலில் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனங்களையும் பந்தலைச் சுற்றிலும் நிறுத்தி அரண் போல அமைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

பின்னர், சோர்வுடன் மயக்கமடையும் நிலையில் இருந்த இருவரை, போராட்டக்காரர்களே தங்கள் சொந்த வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து உடல்நிலை தேறியதும் மீண்டும் போராட்ட பந்தலுக்கு வந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.
விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை
கோவை கருமத்தம்பட்டியில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 29 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது ஜவுளி நிறுவனங்களால் வழங்கப்படும் கூலி குறைவாக இருக்கிறது என தங்கள் பிரச்சினைகளைக் கூறி, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனையடுத்து ஐந்து நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். பின்னர், 12 விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு தொடர் உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டது.

இதையும் படிங்க |
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, கோவை மற்றும் திருப்பூர் புறநகரப் பகுதிகளில் வணிகர் சங்கங்கள் கடந்த வாரம் ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தன. மேலும், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான கட்சியான அ.தி.மு.க உள்பட பா.ஜ.க., த.வெ.க., கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இது மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், போராட்டத்தை முடக்குவதை விட்டுவிட்டு தங்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.