தென்காசி: தென்காசியில் நண்பரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக முன்னாள் பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதற்கு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று அவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (58). இவர் பிரபல தனியார் (KPN) ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவர் தென்காசி மாவட்ட பாஜக முன்னாள் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர். இந்நிலையில், இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அவரது நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பரின் 15 வயது மகள் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார்.

இதைப் பார்த்த நீலகண்டன் சிறுமியின் பெற்றோர்கள் யாருமின்றி தனியாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் அவர் சிறுமியிடம் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பயந்துபோன சிறுமி சிறிது நாட்களுக்கு பின் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். ஆனால், இந்த புகார் குறித்து விசாரணை நடத்த போலீசார் கால தாமதமாக்கியதாகவும், அதனால் நீண்ட நாட்களாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருப்பதாகவும் கூறி சிறுமியின் பெற்றோர்கள் தென்காசி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தனர்.
ஆனால், அப்போதும் போலீசார் இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் பெற்றோர்கள் இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: "ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை, ஒருமுறை கூட போனில் பேசியதில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓப்பன் டாக்! |
முன்னதாக இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் அந்த உத்தரவின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் நீலகண்டன் மீது கடந்த மாதம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்து கொண்ட நீலகண்டன் மும்பைக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில், ஆலங்குளம் தனிப்படை போலீசார் நேற்று மும்பைக்கு சென்று, அங்கு தலைமறைவாக இருந்து வந்த நீலகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.