சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் நேற்று (மே 16) தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவரிடம் 2-வது நாளாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து, டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை ஏதும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகிகளுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பிய நிலையில், அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை (மே 16) முதல், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு, பெசன்ட் நகரில் உள்ள ராஜேஷ்குமார் என்கிற மின்வாரிய ஒப்பந்ததாரர் வீடு, திரைப்படம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே, விசாகன் வீட்டுக்கு அருகே கிழித்தெறியப்பட்ட சில பேப்பர்கள் இருந்துள்ளன. அதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் வாட்ஸ்அப் சாட்களை நகலெடுத்துக் கிழித்து தூக்கிப் போட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வாட்ஸ்அப் சாட்கள் மதுபான டெண்டர், சரக்கு கொள்முதல் செய்வது போன்ற சில டாஸ்மாக் தொடர்பான தரவுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பேப்பரை இங்கு போட்டது யார்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசாகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள், வீட்டிலிருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து, விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாகனிடமும், அவரது மனைவியிடமும் தீவிர விசாரணை நடத்திய நிலையில், இருவரையும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை, இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இருப்பினும், நேற்று நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து இதுவரை அமலாக்கத்துறை முழுமையான விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், அந்த வழக்கு தொடர்பாகதான் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதா? இல்லையெனில், இரண்டு சோதனைகளும் வெவ்வேறானதா? என்பது குறித்து தற்போது வரையில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.