சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை முடிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது ஆகியவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ''டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மீது முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பல வழக்குகளை பதிவு செய்து இருக்கிறது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ய மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மது வகைகளுக்கு 100 ரூபாய் வரை விலையை விட கூடுதலாக வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்தி உள்ளனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், டாஸ்மாக் நிர்வாக பொது மேலாளர் சங்கீதா தம்முடைய சுய விருப்பத்தின்பேரில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்" என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ''டாஸ்மாக் பார் ஒப்பந்தம், சரக்குகளை எடுத்துச் செல்லும் ஒப்பந்தம், ஒப்பந்த நிபந்தனைகள் தொடர்பான ஆவணங்களை முறைகேடு செய்து விட கூடாது என்பதற்காக சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஏப்ரல் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''குற்றம் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்பே அமலாக்கத்துறை கைது போன்ற நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்பு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. உரிய முறையில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றதா? பெண் ஊழியர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்? என கவனிக்கப்பட வேண்டும். அமலாக்கத்துறை விதி 17ன் படி அனுமானத்தின் அடிப்படையிலோ அல்லது யூகத்தின் அடிப்படையிலோ விசாரணை நடத்த முடியாது'' என தெரிவித்தார்.
இதை கேட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்றைக்கு (ஏப்ரல் 9) ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''அமலாக்கத்துறை நடவடிக்கையால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கக் கூடாது. போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சட்டரீதியான வழிமுறைகள் கடைபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதாரங்கள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் விசாரணை சட்டவிரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது டாஸ்மாக் வழக்கிலும் அதே நடைமுறை நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு vs ஆளுநர் ரவி: '2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை' நடந்தது இது தான்!
திட்டமிடப்பட்ட குற்றங்கள் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்படாத வரை பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. சோதனைக்கு முன்பு சீலிடப்பட்ட கவரில் அதிகார வரம்புக்கு உட்பட்ட அதிகாரிகளுக்கு சோதனைக்கான காரணம் மற்றும் ஆதாரம் குறித்து தகவலை தெரிவிக்க வேண்டும்.
காவல் நிலையத்தில் குற்ற வழக்கு, வழக்கு நிலுவையில் இல்லாத நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. அதனால் ஏராளமான அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் டாஸ்மாக் அலுவலகத்துக்கு வந்து, சோதனை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை 60 மணி நேரம் கொடுமைப்படுத்தியுள்ளனர்'' என, வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து டாஸ்மாக் மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதத்திற்காக விசாரணையை நீதிபதிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்