சேலம்: தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை எச்சரிக்கும் விதமாக சேலத்தில் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகர் விஜய் பரிசுகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த மே 30 ஆம் தேதி முதல் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் நடிகர் விஜயால் வழங்கப்பட்டது. அப்பொழுது ஒரு சிலர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் சிலர் கட்டிப்பிடித்தும் அன்பையும் வெளிப்படுத்தினர். இதன் காட்சிகள் செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகி வருகிறது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வேல்முருகனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக நேற்றைய தினம் சென்னையில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று (ஜூன்.6) சேலம் அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு, பழைய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் விஜயை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
- இதையும் படிங்க: மொழி விவகாரம்: அமித் ஷாவுக்கு ஒரு நியாயம், கமலுக்கு ஒரு நியாயமா? கொந்தளித்த பேராசிரியர் அருணன்!
- இதையும் படிங்க: நெல்லையில் இன்றே கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகை... சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு!
அந்தப் போஸ்டரில், '' எச்சரிக்கை... எச்சரிக்கை... நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களே! அடக்கி வாசியுங்கள். இல்லையெனில் அடக்கப்படுவீர்கள்'' என எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து நடிகர் விஜயின் புகைப்படத்தை அழித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், இப்படிக்கு மாணவர் அணி பொறுப்பாளர் 'கரும்புலி' கவியரசன் என்ற நிர்வாகியின் பெயர், புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தினருக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கும் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கி இருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.