-By இரா.சிவக்குமார்
மதுரை: வயிற்றுப்பிழைப்புக்கான ஆதாரமாக இருக்கும் நெல்லோ, சிறுதானியமோ விளைவிக்கும் துண்டு நிலத்தை விற்று அல்லது வாழும் வீட்டை அடமானம் வைத்தோ அல்லது விற்றோ, நகைகளை விற்றோ அடகு வைத்தோ அவற்றை லட்சக்கணக்கான நோட்டுக்கற்றைகளாக மாற்றி வெளிநாட்டு முகவர்களிடம் கொடுத்து மகனையோ, கணவரையோ, சகோதரரையோ அவர்களின் குடும்பத்தினர் கண்ணீரும், கம்பலையுமாக விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பும் அனுபவம், இன்றைய நவீன உலகில் பொருளாதார நிர்பந்தத்தில் இருக்கும் பலருக்கும் வாய்க்கதான் பெறுகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லப்பவர்கள் ,பல லட்சம் டாலர்களை சம்பாதித்து நாடு திரும்பினால் அவர்களின் வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.
தவிக்கும் தமிழர்கள்: ஆனால், இப்படி வெளிநாடுகளில் வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பலர் பிணமாகவோ, உடல்நலக்குறைவோடோ, சித்திரவதை அனுபவித்தோ அரசின் உதவியுடன் திரும்பும் கண்ணீர் கதைகளை தமிழ்நாடு அவ்வப்போது கேட்டுக் கொண்டுதான் உள்ளது.

வெளிநாட்டில் எளிமையான வேலை, இந்தியாவை விடவும் பல மடங்கு சம்பளம் என்பது போன்ற வெளிநாட்டு முகவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் படும் துயரம் நாளிதழ்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் அவ்வப்போது செய்திகள் ஆகின்றன.
மலேசியாவில் வேலைக்குப் போய் அங்கு கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டவர்கள், அங்கேயே இறந்தவர்கள், பணிக்குப் போன இடத்தில் பணத்துக்கு விற்கப்படும் பெண்கள் என்று வெளிநாட்டு வேலை ,கைநிறைய சம்பளம் என்ற பெரிய பெரிய ஆசைகளுக்கு பின்னால் நிறைய கண்ணீர் கதைகள் ஒளிந்துள்ளன. இப்படி வாழ்வாதாரத்துக்காக மலேசியா சென்று அங்கு நடுத்தெருவில் தவிக்கும் தமிழர்களை சட்டப்பூர்வமாக மீட்கும் வகையில், அவர்களின் கண்ணீரை துடிக்கும் போற்றத்தக்க பணியை மேற்கொண்டு வருகிறார் டாக்டர் கமலநாதன்.
மலேசியாவில் உள்ள உலகளாவிய மனிதநேய மீட்பு அறக்கட்டளை தலைவான இவர், மலேசியாவில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கும், ஏதோ ஒரு சூழலில் அவர்கள் உயிரிழந்துவிட்டால், அவர்களது சடலங்களை தமிழகம் அனுப்பி வைப்பதற்கும் உதவி செய்து வருகிறார். அண்மையில் மதுரை வந்த அவரை ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பில் சந்தித்தோம்.
ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்: அப்போது பேசிய கமலநாதன், "தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே மலேசியாவுக்கு அதிகம் வருகின்றனர். இவர்களில் பலர் போலியான முகவர்களால் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பணிக்கான முறையான விசா எடுத்துத்தான் பணியாற்ற வேண்டும் என்பதெல்லாம் தொழிலாளர்களுக்குத் தெரியாது. மலேசியாவின் காவல்துறை, குடிநுழைவுத் துறை உள்ளிட்ட அமைப்புகள் பணியிடங்களில் திடீரென ஆய்வு மேற்கொள்ளும்போதுதான், தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதே தொழிலாளர்களுக்கு தெரியவரும். சட்டவிரோதமாக பணியாற்றுபவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். நாட்டை விட்டு வெளியேற வேண்டுமாயின் அபராதத் தொகை கட்ட வேண்டும். அபராதம் கட்டமுடியாத அப்பாவி தமிழர்கள் பலர் தண்டனை அனுபவிக்கின்றனர்.
சித்தரவதைக்கு ஆளாகுதல்: பொதுவாகவே இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள், உணவகத் தொழிலுக்காகவே மலேசியா அழைத்து வரப்படுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சில போலி முகவர்கள் அதிக சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி உணவகங்களில் சேர்த்து விடுகின்றனர். குறைந்தபட்சம் 8 மணி நேர வேலைக்கு என்பதற்கு மாறாக, 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓய்வின்றி வேலை வாங்குகின்றனர். முறையான ஒப்பந்த ஆணை இல்லை என்பதால், முறையான வேலை நேரமும் இல்லை, விடுப்பும் வழங்கப்படுவதில்லை.
உரிமம் பெற்ற முகவர்கள் அனுப்புகின்ற தொழிலாளிகள் கூட சில நேரங்களில் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். உரிய அனுமதியின்றி மலேசியாவில் தொழிலாளர்கள் வேலை பார்ப்பது எவ்வளவு தவறோ, அதேபோன்று நிறுவனங்கள் உரிய அனுமதியின்றி ஒரு வெளிநாட்டு நபரை வேலைக்கு வைத்திருப்பதும் தவறு.
ஆனால் இந்தச் சிக்கலில் நிறுவனத்தின் உரிமையாளருக்கு எளிதாக ஜாமீன் கிடைக்கும். ஆனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தாய்நாட்டை விட்டு, குடும்பத்தை விட்டு வந்த நிலையில் பணியிடங்களில் கொடுக்கப்படும் நெருக்கடிகளால் பல தொழிலாளர்கள் உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டு இறந்து போகின்றனர். சில நேரங்களில் பிறரால் அடித்து, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
சட்டப்படி தீர்வு: தொழிலாளிகள் தவறே செய்யாதபோதும் பணியிடத்தில் திருடிவிட்டனர் என்று நிறுவனங்களின் உரிமையாளர்களால் மலேசிய போலீசாரிடம் திட்டமிட்ட புகார்கள் அளிக்கப்படும்போது, தவறான புகார் என்பதை எடுத்துக் கூறி அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து சட்டப்பூர்வமாக மலேசிய தொழிலாளர் நலத்துறை மூலமாக மேற்கொண்டு வருகின்றோம். மலேசிய தொழிலாளர் துறை, குடிநுழைவுத் துறை, காவல்துறை என பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு இருக்கின்ற காரணத்தால் மிகத் துணிச்சலாக செயல்பட முடிகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்தோர் உட்பட இந்தியாவில் இருந்து மலேசியா வரும் தொழிலாளர்கள் சித்திரவதைக்கு ஆளாகுதல், மனித உரிமைகளுக்கு விரோதமாக சுரண்டப்படுதல், இறந்து போன நபர்களின் உடலை மீட்டல், பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்களைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பிரச்சனைகளையெல்லாம் மலேசிய நாட்டுச் சட்டப்படி தீர்வைப் பெற்றுத் தருகின்றோம். கடந்த 18 ஆண்டுகளாக இவ்வாறாக பாதிக்கப்படும் தமிழர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளோம். எதிர்பாராத விதமாக இறந்தவரின் உடலை மீட்பதற்கு இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் வரை செலவாகும். இதற்காக மலேசிய அரசின் உதவியுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்கிறோம். சில நேரங்களில் அதிக நாட்கள் ஆன உடலை, குடும்பத்தாரின் ஆலோசனையோடு மலேசியாவிலேயே இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்கிறோம்.
விழிப்புணர்வு தேவை: இதுபோன்ற புலம்பெயர் தொழிலாளிகளுக்கான சிக்கல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. குப்பையைக் கூட்டிப் பெருக்க, பெருக்க மீண்டும் குப்பை உருவாவதுபோல் இந்தச் சிக்கல் மீண்டும் மீண்டும் இருந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை இந்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ இதுபோன்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். உரிமம் பெற்ற முகவர்கள் மூலமாகவே வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநில அரசுகளோடு கலந்து பேசி இதனை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்."என்றார் கமலநாதன்.