ETV Bharat / state

தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் உயர்வு! கூடுதல் கட்டணம் வசூலித்தால் என்னவாகும்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 15, 2025 at 5:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்தி கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது.

இதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 4 லட்சத்து 35 ஆயிரம் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த கல்வியாண்டை (2024-25) ஒப்பிடும்போது, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தில் பெரியளவில் மாற்றமில்லை.

ஆனால் அதேசமயம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணம் ஆண்டிற்கு 15 லட்சம் ரூபாய் என்றும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் கட்டணம் 27 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதியக் கட்டண அறிவிப்பு 2025-26 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது. மேலும் கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், சிறப்புக் கட்டணம், ஆய்வகம், கம்ப்யூட்டர், இன்டர்நெட் கட்டணம், நூலகக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், பராமரிப்பு மற்றும் வசதிக் கட்டணம், பாட இணைச் செயல்பாடுகளுக்கான கட்டணம் மற்றும் பிற தொடர் செலவுகள் உள்ளிட்டவையும் அந்தந்த கல்லூரிகளுக்கும் ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

தனியார் கல்விக் கட்டண நிர்ணய குழுவின் தலைவர் பொங்கியப்பன் தலைமையில் நடைபெற்ற குழுவின் முடிவு அடிப்படையில் இக்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டுக்கு ஒருமுறை: மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் (2025-26), மூன்று கல்வி ஆண்டுக்கான புதிய கட்டண விவரங்களை பொங்கிப்பன் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.

அதன்படி 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் 4 லட்சத்து 35 ஆயிரம் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் என்றும், என்.ஆர்.ஐ. (வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள்) ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டு கல்விக் கட்டணம் 27 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதேபோன்று நான்கு தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் அரசு ஒதக்கீட்டு இடங்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 16 லட்சத்து 20 ஆயிரமும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடத்திற்கு 30 லட்சம் ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பழைய கல்விக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது 75 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை இக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணங்களோடு ஒவ்வொரு மாணவரிடமும் தலா 60 ஆயிரம் ரூபாய் கல்லூரி வளர்ச்சி நிதியாக நிர்வாகங்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கட்டண நிர்ணய குழு தெரிவித்துள்ளது. மேலும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் அனைத்தும் தனியாக வசூலித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால், தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) ஒப்புதலை திரும்பப் பெறுவதற்கும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தால் இணைப்பை ரத்து செய்வதற்கும், அபராதம் விதிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என்று கட்டண நிர்ணயக் குழு எச்சரித்துல்ளது.

இதையும் படிங்க: லேடி வெலிங்டன் மாதிரி பள்ளியில் 'ப' வடிவில் அமர வைக்கப்பட்ட மாணவிகள்; கற்றலை மேம்படுத்த திட்டம்!

2024-25 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் 13 லட்சத்து 50 ஆயிரமாகவும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு கட்டணம் 24 லட்சத்து 50 ஆயிரம் எனவும், தனியார் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் 16 லட்சத்து 20 ஆயிரமும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு கட்டணம் 29 ஆயிரத்து 40 ஆயிரமும் வசூலிக்கப்பட்டது.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 4 லட்சத்து 35 ஆயிரம் முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையும், தனியார் பல்கலைக்கழகத்தில் 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.