சென்னை: ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையேயான தபால்காரர் தான் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஏற்கெனவே ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் முதலமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் ரவிக்கு சரமாரியாக குட்டு வைத்தது. அத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அனுப்பும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநர் ரவி அரசியல் சாசனத்தை மீறி நடந்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது எனக் கூறிய உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரம் 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தும் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் ஆளுநர் ரவிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்ட சூழலில், இதுதொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரர் மட்டுமே. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பும் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் சட்டத்தை இயற்ற அதிகாரம் உள்ளது. ஆளுநர் பதவி என்பது ஒரு கெளரவ பதவிதான். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். ஆளுநர் ரவியை பொறுத்தவரை அவர் ஒரு பாஜககாரரை போல செயல்படுகிறார். தமது பதவிக்காலம் முடிந்தும் கூட அவர் தமிழகத்தை விட்டு செல்லாமல், பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால், அவரது இந்த செயல்பாடுகள்தான் திமுகவுக்கு மறைமுகமாக உதவி வருகிறது." என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், தொகுதி வரையறை குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "நாட்டின் நலனுக்காக மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், ஒன்றிய அரசின் தொகுதி வரையறையால் பாதிக்கப்படக்கூடாது. எனவே, இந்த தொகுதி வரையறை நடவடிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்" எனக் கூறினார்.
