சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் அப்துல் கரீம் கூறியதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி கூறினோம்.
புதிய வக்ஃப் சட்டம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கிறது. இஸ்லாமியர்கள் பொதுநலனுக்காக வழங்கிய சொத்துகளை நிர்வகிக்க இஸ்லாமியர்களுக்கு தான் உரிமை உண்டு. இந்நிலையில், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை ஏன் வக்ஃப் நிர்வாகத்தில் கொண்டுவர வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''வக்ஃப் திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள் வக்ஃப்-க்கு தானம் செய்ய முடியாது என்று கூறுவது மதமாற்றம் செய்து சொத்துகளை அபகரிக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. வேளாண் சட்டம் கொண்டு வந்து ஜனநாயக போராட்டம் மூலமாக மத்திய அரசு பின்வாங்கியது. அதேபோல நாங்கள் ஜனநாயக போராட்டத்தை தொடர்வோம்'' என்றார்.
இதையும் படிங்க: 'எங்களுக்கு குடிக்க தண்ணி இல்ல... சீட்டாட்டம் கேக்குதா'? மாநகராட்சி ஊழியர்களால் பரிதவித்த மக்கள்!
மேலும், "இது தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கும், ஆதரித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த உறுப்பினர்களுக்கும் நன்றி. மேற்கு வங்கத்தை போல தமிழகத்தில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை கண்டித்து வருகிற 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்." எனவும் அப்துல் கரீம் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்