வேலூர்: வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் சிறை அதிகாரிகளுக்கான 9 மாதங்கள் பயிற்சி நிறைவு விழா மத்திய சிறைக் காவலர் பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு சிறைத் துறை இயக்குநர் மகேஷ்வர் தயாள், ''கைதிகள் தண்டை பெற்றுத்தான் சிறைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு சிறைக்குள் தண்டனை அளிக்க வேண்டாம்'' என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி பேசினார்.
பயிற்சி மைய இயக்குநர் பிரதீப் தலைமையில் நடந்த இந்த விழாவில் தமிழ்நாடு சிறைத் துறையின் இயக்குநர் மகேஷ்வர் தயாள் கலந்துகொண்டு சிறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு பயிற்சியை சிறப்பாக முடித்த அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். இதில் ஆல் ரவுண்டராக தமிழ்நாட்டை சேர்ந்த ஜோதிராம், சிறப்பாக துப்பாக்கி சுடுதலில் முருகேசன் உள்ளிட்டோர் பதக்கங்களை பெற்றனர்.
இவ்விழாவில் சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம், பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். வேலூரில் இன்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், காலையிலேயே விழா துவங்கி அணிவகுப்பு முடிந்தது. இருப்பினும் விழாவில் பங்கேற்ற சிறை அதிகாரிகளில் இருவர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டபின் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இவ்விழாவில் தமிழ்நாடு சிறைத்துறை இயக்குநர் மகேஷ்வர் தயாள் பேசுகையில், '' 32 ஆவது பயிற்சி நிறைவு நாள் இன்று. சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் பயின்று நீங்கள் சிறப்பாக பயிற்சியை முடித்துள்ளனர். இந்த சிறை சீர்திருத்த பயிலகம் நாடு முழுவதும் உள்ள சிறை அதிகாரிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து 3 கடைகளில் கைவரிசை காட்டிய 'ஹெல்மெட்' திருடர்கள்: அச்சத்தில் செங்கல்பட்டு மக்கள்!
இந்த பயிற்சி உங்கள் ஆற்றலையும், திறனையும் அதிகரிக்கும். கல்வி என்பது வலிமை வாய்ந்த ஆயுதமாகும். சிறையில் உள்ளவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மேலும் இணையவழி சிறை பதிவேடுகள், கோப்புகள் பராமரிப்பு அனைத்தும் கணினி இணைய பதிவேடுகளாகும். இவைகள் மூலம் உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய புலனாய்வு செயலகத்திற்கு குற்ற வழக்குகள், குற்றவாளிகள் குறித்து தகவலை பரிமாற பயனுள்ளதாக அமையும். மேலும், உங்களை எல்லாம் நான் கேட்டுகொள்வது; இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கைதிகளுக்கு தண்டனையாக வழங்கப்படுவதே சிறை தண்டனை தான். அதனை அனுபவிக்க தான் அவர்கள் சிறைக்கு வருகிறார்கள் . மேலும், நீங்கள் அவர்களுக்கு சிறைக்குள் தண்டனையை அளிக்காதீர்கள்.'' என்று அவர் அறிவுறுத்தினார்.