சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை இன்று அறிமுகம் செய்தார்.
அந்த மசோதாவில், " முதலமைச்சரால் 18.11.2023 அன்று சட்டசபையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. உச்ச நீதிமன்றம் கடந்த 8 ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பின்படி, அந்த மசோதாக்களுக்கு 18.11.2023 அன்றே ஒப்புதல் பெறப்பட்டதாக கருதப்படுகிறது. அந்த மசோதாக்களில் ஒன்றான பல்கலைக்கழக சட்டங்கள் மூலம் 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இனி 'காலனி' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது.. பேரவையில் முழங்கிய ஸ்டாலின்.. என்ன காரணம்? |
அதேபோல், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாற்றுத்திறன் அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்கிற மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016 (மத்திய சட்டம்) 3-ஆம் பிரிவின்படி, பல்கலைக்கழகங்களின் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவதற்கு, காது கேளாத, வாய் பேசமுடியாதவர்களுக்கான தகுதியின்மையை நீக்குவதற்கு, சில பல்கலைக்கழகச் சட்டங்களில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் அவர்கள் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மையை நீக்க தற்போது முடிவு செய்துள்ளது. மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பிர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத் திருத்த மசோதா அவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.