சென்னை: தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், அவர் திமுக-வில் வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பதிவி பறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அவர் வகித்து வரும் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-இன் படி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்படுகிறார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிமொழி கண்டனம்
பொன்முடியின் வைரல் வீடியோ தொடர்பாக இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க மக்களவை உறுப்பினரும், துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதில், அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருந்த அவர், எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.
பொன்முடியின் சர்ச்சை பேச்சு
அமைச்சர் பொன்முடி பேச்சு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் காணொளியில், பெண்கள்; குறிப்பாக பாலியல் தொழிலாளர்கள் குறித்து சர்ச்சை கருத்துகளை பேசியுள்ளார்.
அதில், பாலியல் தொழிலில் விலை பேசுவது தான் வியாபாரமே தவிர, குறிப்பிட்ட ‘சமயங்கள்’ குறித்து பேசுவது சரியாக இருக்காது என்ற தொனியில் பொன்முடி பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க |
சில மாதங்களுக்கு முன் தி.மு.க அரசின் ‘பெண்கள் விடியல் பயணம்’ திட்டம் தொடர்பாக பேசியிருந்த அமைச்சர், ‘பெண்களுக்கு ஓசி பஸ்’ என்று மேடையிலேயே கூறியது பெரும் பேசுபொருளானது. இந்த சூழலில், புதிய சர்ச்சையில் சிக்கி கட்சி பதவியை இழந்துள்ள பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து நீக்கி கண் துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது எனவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்