கோயம்புத்தூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார். நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானை பாகன்களுக்காக கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை திறந்து வைத்து, அவர்களிடம் வீட்டுச் சாவிகளை ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளை குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், உதகையில் நடைபெற்ற 127 ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்ததார்.
பின்னர் பழங்குடி மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியதுடன், அங்கு நடைபெற்ற கண்காட்சிகளையும் பார்வையிட்டார். உதகை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (மே 16) உதகையிலிருந்து கிளம்பினார்.
மேட்டுப்பாளையத்தில் பிற்பகலில் ஓய்வு எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பின்னர் மாலையில் அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வழியில் பொதுமக்கள் வரவேற்பினை அவர் ஏற்றுக் கொண்டார். அன்னூர் அருகே குறுக்கிலியாம் பாளையம் என்ற இடத்தில் மாற்றுத்திறனாளி கோபால் என்பவர் புத்தகத்துடன் நிற்பதை பார்த்த முதல்வர் வாகனத்தை நிறுத்தி, வாகனத்தில் இருந்து இறங்கி புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.
நல்லி செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோபால், மாற்றுதிறனாளிகளுக்கு உள்ளாட்சி பதவிகளில் நியமன பதவிகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொண்டார். இதே போன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுக்கா குலேகவுண்டன்பாளையத்தில் உள்ள மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தலித் அருந்ததியர் மக்களுக்கு மின்சார வசதி செய்து தர கோரியும், காலனி பெயர் நீக்கத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
இதனையடுத்து கோவை விமான நிலையத்திற்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மக்களவை உறுப்பினர் ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானவர், கோவை போலீஸ் கமிஷ்னர் சரவணசுந்தர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் "நூல் விட்ட இளைஞர்கள்.. தாராளம் காட்டிய சிறுமி"; 32 சவரன் நகை மாயமான புகாரில் பகீர் திருப்பம்!
இவர்களுடன் ஏராளமான தொண்டர்களும் முதல்வரை கூடி நின்று வரவேற்றனர். வரவேற்பினை ஏற்றுக் கொண்ட முதல்வர் இரவு எட்டு மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.