சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழ் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் (38) மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா, கானா நாட்டை சேர்ந்த ஜான் (38) ஆகிய இருவரையும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொக்கைன் கடத்தல் வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரித்தபோது கொக்கைன் கடத்தலில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் என்பவரும் நண்பர்கள் என்பதும், பிரதீப்குமார் நைஜீரியாவை சேர்ந்த ஜீரிக், கானாவை சேர்ந்த ஜான் ஆகியோரிடம் கொக்கைன் வாங்கி நண்பர் பிரசாத் உள்ளிட்ட பலரிடம் சென்னையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

தற்போது தலைமறைவாக இருக்கும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஜீரிக் உள்பட சிலரை போலீசார் தேடி வரும் நிலையில், பிரதீப் குமாரின் நண்பர் பிரசாத்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் போதைப் பொருளை வாங்கி சினிமா நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரசாத் செல்போனை ஆய்வு செய்ததில் ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு அடிக்கடி பேசியுள்ளது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் போதை பொருள் நுண்ணறிவு காவல்துறையினர் நடிகர் ஸ்ரீகாந்தை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவ பரிசோதனைகள் முடிந்த நிலையில், மீண்டும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: சாப்பிட வந்தபோது இடிந்து விழுந்த வீட்டின் சுவர்; பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!
இந்நிலையில் வள்ளுவர்கோட்டம் அருகில் இருக்கும் லேக் ஏரியா முதல் தெருவில் வசித்து வரும் நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கொக்கைன் வாங்கி உபயோகப்படுத்திய நிலையில் அவரது இல்லத்தில் கொக்கைன் போதைப் பொருள் இருக்கிறதா? என்பது குறித்து அறிந்து கொள்ள நுங்கம்பாக்கம் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஸ்ரீகாந்த் இல்லத்தில் சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்திடம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதன் பிறகு ஸ்ரீகாந் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்