சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி பகுதியில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் மற்றும் கிலெனிகல்ஸ் மருத்துவமனை இணைந்து தலைக்கவசம் அவசியம் குறித்து 'NO HELMET NO RIDE' என்னும் தலைப்பில் 18 கி.மீ. தூரத்துக்கு சாலை பாதுகாப்பு பைக் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 12) நடைபெற்றது.
இதில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பைக் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக 'NO HELMET NO RIDE' எனும் பேனரில் கையெழுத்திட்டு பைக் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார். இந்த பைக் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் கூறும் போது, ''அதிகமாக நடக்கும் சாலை விபத்துகளில் 72 சதவீதம் உயிரிழப்பு தலைக்கவசம் அணியாதவர்களாகவே இருக்கின்றனர். மெத்த படித்தவர்களுக்கு கூட தலைக்கவசம் அணிவதில் விழிப்புணர்வு இல்லை.
ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறி வைத்து அதிக அளவில் சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் ரவுடிகள் மாநகருக்கு வெளியில் தான் இருக்கிறார்கள். குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுக்க சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல குற்றங்கள் தடுக்கப்பட்டு இருக்கிறது. தாம்பரம் மாநகர காவல் துறையை பொறுத்தவரை சவாலாக இருப்பது போதைப்பொருள் கலாச்சார குற்றங்கள் தான்.
அதிகளவில் போதை பொருட்கள் பக்கத்து மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரப்பட்டு இங்கு வியாபாரம் செய்யப்படுகிறது. தற்போது அதிரடியாக சோதனை செய்ததில் 140 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.'' என்று மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் கூறினார்.
இதையும் படிங்க: "அமைச்சர் பொன்முடி குறித்த கேள்வி" - அமைச்சர் கோவி. செழியன் பதில்!
அப்போது செய்தியாளர்கள், ''தாம்பரம் மாநகரில் என்கவுன்ட்டர் இருக்குமா?" என்கிற கேள்வியை மாநகர காவல் ஆணையரிடம் எழுப்பினர். அதற்கு ஆணையர், ''என்கவுன்ட்டர் பற்றி சொல்ல வேண்டும். யாருக்கு எதை கொடுக்க வேண்டுமோ? அதை கொடுப்போம்" என்று மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்