தூத்துக்குடி: சுங்க கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விதித்த இடைக்கால தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 135 கிலோமீட்டர் தூரம் உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் மற்றும் மதுரை எலியார்பத்தி ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சுங்கச்சாவடி நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடாமலும், சாலையின் நடுவே சென்ட்ரல் மீடியினில் அரளி செடிகள் நட்டு பராமரிக்காமல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராமல் உள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, ஜூன் 4ஆம் தேதி சுங்க கட்டணம் வசூல் செய்ய தடைவிதித்து தூத்துக்குடி, புதூர், பாண்டியாபுரம் மற்றும் மதுரை எலியார்பத்தி சுங்கசாவடிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சுங்கச்சாவடி நிறுவனங்கள் தங்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை நகல் வரவில்லை எனக்கூறி தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலித்து வந்தது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி, ஜூன் 5ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து அன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சுங்கச்சாவடி நிறுவனம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விதித்த இடைக்கால தடைக்கு, தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களாக சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் வருவதற்கு முன்பே கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் மனுதாரர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, கட்டண வசூல் நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு கிடைத்தவுடன், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டணம் மீண்டும் வசூல் செய்யப்பட்டது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பின் கருத்தை கேட்காமல், எந்தவித உத்தரவும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை நடத்துவோம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.