தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நூதன முறையில் லஞ்சம் வாங்கிய தலைமை எழுத்தர் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வில்லங்கச் சான்று கேட்டு சுவாமிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். எனவே வில்லங்க சான்று பெறுவதற்காக தலைமை எழுத்தர் பத்மஸ்ரீ என்பவரை அணுகியுள்ளார். அப்போது அவர் ரூ.1500 லஞ்சம் தருமாறு விவசாயியிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து தன்னிடம் இருந்த ரூ.1000 பணத்தை தலைமை எழுத்தர் பத்மஸ்ரீயிடம் தந்து வில்லங்கச் சான்று கேட்டுள்ளார். அதற்கு பத்மஸ்ரீ, கேட்ட தொகையில் மீதம் உள்ள ரூ.500 கொடுத்தால் தான் சான்று வழங்குவேன் என்று விடாப்படியாக கூறி விவசாயியை பலமுறை அலைய விட்டுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த விவசாயி, இது குறித்து தஞ்சை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் மனுவை அளித்து முறையிட்டுள்ளார்.
புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல்கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையில் ஆய்வாளர்கள் அருண் பிரசாத், பத்மாவதி, சரவணன் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் இன்று (ஜூன் 10) சுவாமிமலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். பிறகு புகாரளித்த விவசாயியிடம் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டை கொடுத்து அனுப்பிவிட்டு அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
இதையும் படிங்க: ''இது அடமானம் பெற்ற சொத்து'' - வீட்டு சுவரில் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்; போலீசில் பெண் பரபரப்பு புகார்!
விவசாயி 500 ரூபாய் நோட்டை பத்மஸ்ரீயிடம் கொடுக்க முயன்ற போது அந்த பணத்தை அதே அலுவலகத்தில் தன்னுடைய ப்ரோக்கர் போல் வைத்துள்ள ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர் மகாலிங்கம் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து பத்மஸ்ரீ உத்தரவுப்படி விவசாயி 500 ரூபாய் நோட்டை மகாலிங்கம் என்பவரிடம் கொடுத்தவுடன் அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பத்மஸ்ரீ மற்றும் மகாலிங்கம் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதன் பின்னர் இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவாமிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி இருவர் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.