தேனி: முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு மேற்கொண்ட ஆய்வு நிறைவடைந்தது.
தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய துணை கண்காணிப்பு குழு இன்று சென்றது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்புப் பொறியாளரும், துணை கண்காணிப்பு குழு தலைவருமான கிரிதர் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. மேலும் இதில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகளாக தமிழக நீர்வளத்துறையின் முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் செல்வம் மற்றும் கேரளா அரசின் பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசன துறை கண்காணிப்பு பொறியாளர் லெதின், செயற்பொறியாளர் சிஜி ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் இன்று காலை தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீர் நிமிடத்திற்கு 52.12 லிட்டர் என கணக்கீடு செய்யப்பட்டது. அணையின் நீர்மட்டம் 130.45 அடிக்கு ஏற்ப கசிவு வெளியேறும் அளவைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதை துணைக் கண்காணிப்புக் குழு உறுதி செய்தது.
இதையும் படிங்க: நிதி நிறுவனத்திடம் பணத்தை இழந்தவர்களால் ஸ்தம்பித்த எஸ்பி ஆபீஸ்! குமுறும் தேனி மக்கள்!
அணையில் உள்ள 13 மதகுகளில் 3, 6, 9 ஆகிய மூன்று மதகுகள் இயக்கி சரி பார்க்கப்பட்டன. மேலும் மதகுகள் இயக்கம் சீராக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இந்த துணைக் கண்காணிப்புக் குழுவின் ஆய்வறிக்கை முதன்மை கண்காணிப்புக் குழு
தலைவரான தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயினுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நீர்மட்டம் 136 அடியை எட்டும் போது முதன்மைக் கண்காணிப்புக் குழுவின் ஆலோசனை பெற்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.