வேலூர்: வேலூரில் கௌரவ பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி துணை முதல்வரை கைது செய்யக்கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், வேலூரில் பழமை வாய்ந்த கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் துணை முதல்வராக இருப்பவர் அன்பழகன். இவர் இதே கல்லூரியில் கௌரவர பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து துணை முதல்வர் அன்பழகன் மீது பெண்களுக்கு துன்பம் விளைவிக்கும் தடைச் சட்டம், பிஎன்எஸ் (BNS) பிரிவு 75, 78, 115(2), 316(2), 318(4) உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் துணை முதல்வர் அன்பழகன் தப்பி தலைமறைவானார்.
இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டம் செய்ததுடன் கல்லூரியின் நுழைவாயிலின் கேட்டின் பூட்டை உடைத்து ஊர்வலமாக அண்ணா சாலைக்கு வந்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
காவல் நிலையம் முன்பு குவிந்த மாணவர்கள் பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி துணை முதல்வரை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட விரிவுரையாளருக்கு நியாயம் வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து முற்றுகையிட்டனர்.
இதையும் படிங்க: விபத்தில் முடங்கிய கணவர், நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் - துயரத்தில் இருந்து மீள அரசு உதவிக்காக ஏங்கும் பெண்!
பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவர்களின் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது. உடனடியாக கல்லூரி துணை முதல்வர் அன்பழகனை கைது செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை காணப்பட்டது. இந்த நிலையில், கல்லூரி துணை முதல்வர் தப்பி ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
வேலூரில் கல்லூரி பெண் விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட துணை முதல்வரை விரைவாக கைது செய்யக்கோரி மாணவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.