-By இரா. மணிகண்டன்
தென்காசி: விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடி வரும் வேளையில், வெறும் ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்று இயலாதவர்களுக்கு பசியாற்றி வருகிறார் ராஜம்மாள் பாட்டி.
உணவு தொடங்கி, உடுத்தும் உடை வரை அனைத்து பொருள்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு டீ குடிக்கவே குறைந்தது 15 ரூபாய் தேவைப்படுகிறது. கூடுதலாக தின்பண்டங்கள் மீது கண் சென்றால், அவ்வளவு தான்... இப்படி எந்த ஒரு பொருளையும் பத்து ரூபாய்க்கு குறைவாக வாங்க முடியாத சூழலில், வெறும் ஒரு ரூபாய்க்கு ஆப்பம் விற்று மனநிறைவு அடைந்து வருகிறார் ராஜம்மாள் பாட்டி. தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் வசித்து வரும் 70 வயதான இவரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
5 பைசாவில் தொடங்கிய ‘ஆப்பம்’ விற்பனை
சங்கரன்கோவில் உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவில் ராஜம்மாள் பாட்டி ஆப்பம் சுடுவதை அறிந்து ‘ஈடிவி பாரத் தமிழ்நாடு’ சார்பில் அவரைக் காண சென்றோம். தெருவில் ஒரு வீட்டின் முன் அமர்ந்து விறகு அடுப்பில் சுடச்சுட ஆப்பம் சுட்டுக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் சென்றோம். ஒரு ஆப்பம் எவ்வளவு பாட்டி? என்று கேட்க, அதற்கு நமது முகத்தை பார்க்காமலே ஒரு ரூபாய் என்று பதில் வந்தது.

ஆச்சரியத்துடன் தொடர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்தோம். 50 ஆண்டுகளுக்கு முன் ராஜம்மாள் பாட்டியின் தாய் ஆப்பம் சுடுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் ஐந்து பைசா, பத்து பைசாவுக்கு ஆப்பம் விற்பனை செய்த இவர், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விலையை கூட்டாமல், வெறும் ஒரு ரூபாய்க்கு ஆப்பம் சுட்டு விற்பதை கண்டு வியப்பாகத் தான் இருக்கிறது.
பச்சரிசி, புழுங்கல் அரிசி, மண்டவெல்லம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஆப்பத்திற்கான மாவை முன் தினமே தயார் செய்கிறார் ராஜம்மாள் பாட்டி. காலை 6 மணிக்கு விறகடுப்பை மூட்டி, தோசைக் கல்லை வைத்து, அது சூடான உடன் அதன் மீது தண்ணீரை தெளிக்கும் போது வரும் ஓசையே, அவரது ஆப்பத்தை சுவைக்க வேண்டும் என்ற உணர்வை, அத்தெருவில் வசிக்கும் மக்களிடம் தூண்டுகிறது.
பலருக்கும் இவரது ஆப்பக்கடையில் இருந்து வரும் கமகமக்கும் மணம் தான், அவர்களைத் தட்டி எழுப்பும் மணியோசையாக இருந்து வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பசியைப் போக்கும் ஒரு ரூபாய் ஆப்பம்
அந்த பகுதியில் சிறுவர்கள் தொடங்கி இளசுகள், பெரியவர்கள் என அனைவரும் பாட்டியின் ஆப்பத்துக்கு ரசிகர்களாகவும், அதன் சுவைக்கு அடிமையாகியும் உள்ளனர். ஒரு ரூபாய்க்கு அதிகபட்சமாக மிட்டாய் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையை மாற்றி, மக்களின் பசியையும் போக்க முடியும் என்று நிரூபித்து வருகிறார் ராஜம்மாள் பாட்டி.
கணவரை இழந்து 32 ஆண்டுகள் ஆன நிலையில், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக ஒரே இடத்தில் ஆப்பம் விற்று அன்றாட வாழ்வை இவர் நகர்த்துகிறார். இவரது அம்மா 92 வயது வரை இட்லி, வடை வியாபாரம் செய்து வந்ததாகவும், அதனை தொடர்ந்து, தான் ஆப்பம் வியாபாரம் செய்து வருவதாகவும் பாட்டி நம்மிடம் பெருமையாகக் கூறினார்.
வேலையில்லாம சும்மா இருப்பது பிடிக்காது!
ஆரம்பத்தில் பனங்கருப்பட்டி சேர்த்து ஆப்பம் சுட்டு வந்த நிலையில், விலை உயர்வால் தற்போது மண்டவெல்லத்தில் இனிப்பு ஆப்பத்தை ராஜம்மாள் பாட்டி தயார் செய்கிறார்.
மக்கள் அன்போடு என்னிடம் வாங்கி செல்கிறார்கள்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் எனக் கூறும் ராஜம்மாள் பாட்டி, இதுல உக்காந்து ஆப்பம் சுட்டு கொடுப்பதில் ஒரு மன அமைதி கிடைப்பதாகக் கூறுகிறார். ‘சும்மா உட்கார்ந்திருப்பது எனக்கு பிடிக்காது; அதனால தான் ஆப்பம் விக்கிறேன்’ என்று பாட்டி கூறியது சோர்வில் இருக்கும் பலரையும் தட்டி எழுப்பும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க |
ஒரு நாளைக்கு 200 ஆப்பம் விற்றால் 50 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு அதுவே போதும் என்றும் மக்கள் வயிறு நிரம்பினாலே, நான் மகிழ்ச்சியோடு இருப்பேன் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.
பாட்டி கடை வாடிக்கையாளர்கள்
பாட்டியிடம் ஆப்பம் வாங்கி வரும் வாடிக்கையாளர் கீதா, "எனது குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்தினர் காலையில் வெறும் ஐந்து ரூபாய்க்கு ஆப்பம் வாங்கி சாப்பிட்டால் போதும்; அன்றைய பசியை போக்கிக் கொள்ளலாம்" என்று பேரன்புடன் தெரிவித்தார்.
பாட்டியின் மகன் சங்கர நாராயணிடம் பேச்சு கொடுத்தோம். அப்போது அவர், “எனக்கு சின்ன வயசாக இருக்கும் போதே அப்பா இறந்து விட்டார். வீட்டில் ரொம்ப கஷ்டம். ஆப்பம் சுட்டு தான் அம்மா எங்களை காப்பாற்றினார். இதில் லாபம் ரொம்ப இருக்காது; இருந்தாலும் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற மன திருப்திக்காக வியாபாரம் செய்து வருகிறார்” என்று சிலிர்ப்புடன் பேசினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.