வேலூர்: குடியாத்தம் எர்த்தாங்கல் கங்கை அம்மன் திருவிழாவை காண வந்த பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம் மற்றும் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதில் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிசிடிவி கேமரா இருக்கும் பகுதிகளில் கூட திருட்டு சம்பவங்கள் குறைந்தபாடு இல்லை. அதைப் போன்று ஒரு சம்பவம் தான் வேலூரில் நடந்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் எர்த்தாங்கல் கங்கை அம்மன் கோயில் திருவிழாவை காண வந்த பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனததை மர்ம நபர் நோட்டமிட்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எர்த்தாங்கல் பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோயில் திருவிழா பெரும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கங்கை அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் தபேயந்திரன் என்பவர் தனது பைக்கில் திருவிழாவை காண வந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பைக்கை எடுக்க சென்றபோது தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
திருவிழாவில் பணியில் இருக்கும் குடியாத்தம் போலீசார் உதவியால் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர், நைசாக நோட்டமிட்டு யாரும் பார்க்காத நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து, குடியாத்தம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். திருவிழாவை காண வந்த பிஎஸ்என்எல் ஊழியரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.