சென்னை: தர்பூசணி பழம் தொடர்பாக கருத்து தெரிவித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு கட்டும் வகையில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சேர்க்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அதிகாரிகள் வேண்டுமென்றே பொதுமக்களிடையே தவறான பிரச்சாரத்தை பரப்பியதால், தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தவறான தகவலை பரப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் மற்றும் பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விவசாயிகள் உற்பத்தி செய்யும் தர்பூசணி பழங்களை அரசாங்கமே கொள்முதல் செய்து அதற்கு குறைந்தபட்ச ஆதாய விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, டெல்லிக்கு மோடி; அமித் ஷா சொன்னது இதுதான்" - கூட்டணி ஆட்சி விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈபிஎஸ்!
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி அதிகாரி சதீஷ் குமாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மேலும், தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு கட்டும் வகையில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சேர்க்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சதீஷ் குமார் தற்போது தமிழ்நாடு மருந்து நிர்வாகத் துறைக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்