தேனி: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்த நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதனிடையே, கேரளாவின் அருகில் இருக்கும் தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், கேரளாவை ஒட்டியுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லையோரத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு: தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்#NipahVirus #kerala #coimbatore #Tiruppur #nilgiris #kanyakumari #ETVBharatTamilnadu pic.twitter.com/8M84Vx3emH
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 18, 2024
அந்த வகையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கேரளா இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முந்தல் சோதனைச் சாவடியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக தீவிர மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கேரளாவிலிருந்து வரும் இருசக்கர வாகனங்கள், கார், பேருந்துகள் மற்றும் காய்கறி வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக 24 மணி நேரமும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும் என்று தேனி மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கேரள வாகனங்கள் மற்றும் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உணவு அருந்தும் முக்கிய இடமாக போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள போடிமெட்டு மலைக் கிராமம் உள்ளது.
இதையும் படிங்க: திருச்சி அருகே சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கழன்ற 3 பெட்டிகள்!
இங்கு இரு மாநில மக்களும் ஒன்றாக இணைந்து உணவருந்தும் பகுதி என்பதால், நிபா வைரஸ் பரவல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அங்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படாமல் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள முந்தல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், போடி மெட்டு எல்லைப் பகுதியில் முறையாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கோவையை அடுத்த தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் வரும் நபர்களை முழுமையாக சோதித்த பிறகே சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை அனுமதிக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறது எனவும், வாளையார் சோதனை சாவடியில் சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளாக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதே போல, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைகட்டி உட்பட 12 சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத்துறையினரால் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.